தமிழ்நாட்டுப் பறவைகள்

நூல் விபரம்:
புத்தகத்தின் பெயர் : தமிழ்நாட்டுப் பறவைகள்
ஆசிரியர் :  முனைவர் க. ரத்னம்
பதிப்பாசிரியர் : முனைவர் ச. மெய்யப்பன்
வெளியீடு: மெய்யப்பன் தமிழாய்வகம், புதுத்தெரு, சிதம்பரம் (மணிவாசகர் பதிப்பகம்)
முதல் பதிப்பு: அக்டோபர் 2002
விலை:   ரூ. 225
பக்கங்கள் : 182
புத்தக முன் அட்டை

பறவைகள் இயற்கையின் ஒரு பெரும் உயிர்த்தொகுதி. மனித இனம் தோன்றுவதற்கு வெகு காலம் முன்பே இப்புவியில் தோன்றிய இந்த உயிர்த்தொகுதியின் இருப்பும் வாழ்வும் மனித வாழ்க்கை இப்புவியில் நிலைபெற இன்றியமையாதது. இயற்கையோடு ஒட்டிய கடந்த கால வாழ்க்கை முறை பறவைகளைப் பற்றிய அதிக அக்கறையையும் பொதுவான அறிவையும் அனைவருக்கும் தந்திருந்தது. இன்று நாம் பறவைகளைப் பற்றி மேலான அறியியல் பூர்வமான அறிவைப் பெற்றிருந்தாலும் அது துறை சார்ந்த அறிஞர்களுடையதாக மட்டுமே குறுகிப்போய் உள்ளது. நகரப் பகுதிகளில் பறவைகள் வாழமுடியாததை போல நகர் சார்ந்த வாழ்கை முறையினால் மக்கள் மனங்களில் இருந்தும் பறவைகள் மெல்ல அகன்று வருகின்றன. கானுயிர்ச் செல்வத்தை பெரிதும் பெற்ற வெப்ப மண்டலப் பகுதியான தமிழ்நாட்டில் பல்லுயிரியம் (Biodiversity) ஒரு மிகப்பெரிய வளம். மனித வாழ்க்கைக்கு இப்பல்லுயிரியம் இன்றியமையாதது. இதில் பறவைகளின் இருப்பும் சக வாழ்வும் நமது இருப்பை நேரடியாகப் பாதிப்பவை. மேலும் பறவைகள் ஒரு பெருமைக்குரிய மரபுச் செல்வமும் ஆகும். இவைகளைப் பற்றிய விழிப்புணர்வு நமது சுற்றுச் சூழலைப் பற்றிய விழிப்புணர்வுக்கு வழிகோலும். தமிழர்களின் அன்றாட வாழ்க்கை தொடங்கி இலக்கியம் வரை பறவைகளைப் பற்றிய குறிப்புகளும் அக்கறையும் இயல்பாய் இருந்த நிலை போய் இப்போது எல்லா பறப்பனவும் பறவைகள் என்ற ஒற்றை சொல்லால் மட்டுமே அறியப்படுகிற நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பறவைகளைப் பற்றிய அக்கறையும் அறிவும் பரவ தமிழில் இத்துறையில் அமைந்த நூல்கள் அவசியம்.

தமிழ்ப் பேராசிரியரான முனைவர் க. ரத்னம் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பறவைகள் பார்ப்பதில் (Bird watching) ஈடுபட்டு வருபவர். காடுமலை அலைந்து திரிந்து பறவை இனங்களைக் கண்டறிந்தவர். பறவைகளைக் காணும் ஆர்வத்தாலும், பணி நிமித்தமாகவும் அவர் தமிழ்நாடெங்கும் பயணம் செய்து நூற்றுக்கணக்கான பறவைகளைப் பற்றிய தகவல்களை சேகரித்தவர். இன்று அச்சில் இல்லாத தென்னிந்தியப் பறவைகள் என்ற இவரது முதல் நூலில் கூறப்பட்ட செய்திகளைச் சுருக்கி வண்ணப்படங்களுடன் இந்நூல் மெய்யப்பன் தமிழாய்வகத்தால் சிறப்புற வெளியிடப்பட்டுள்ளது.  சிறிய நூலாயிலும் சிறப்பாக வகைப்படுத்தப் பட்ட விதத்தாலும், அழகிய படங்களாலும் எளிய நடையில் அமைந்த தகவல்களாலும் இந்நூல் ஒரு நல்ல முயற்சியாக உள்ளது. குறிப்பாக பறவைகள் பார்ப்பதில் ஆர்வமுடையோருக்கு ஒரு அவசியமான கையேடாக இது இருக்கமுடியும். பறவை பார்த்தல் போன்ற இயற்கைக்கு அருகில் செல்லும், தொலைக் காட்சி-கணினித் திரைக்கு அப்பால் குழந்தைகளை அழைத்துச் செல்லும் ஆர்வங்களை குழந்தைகளுக்கு ஏற்படுத்த விரும்பும் பெற்றோர் பயன்படுத்தவும், தமது குழந்தைகளுக்கு தரவும் ஏற்ற நூல்.

படம் 1
படம் 2
ஒவ்வொரு பறவையின் வண்ண ஓவியங்கள் தவிர சில வண்ணப் புகைப்படங்களும் ஆங்காங்கே இணைக்கப்படுள்ளன. இவையும் நூலுக்கு அழகு சேர்க்கின்றன. ஒரு பறவையைப் பற்றிய குறிப்பு அதன் உயரத்தைப் பற்றிய அளவில் தொடங்கி அவ்வுடலைப்பற்றிய வருணனைகளைக் கொண்டதாக இருக்கிறது. இவ்வருணனை அப்பறவையின் நிறம் வடிவமைப்பு, சிறகுகள், உடல், இறக்கைகள் இவற்றின் நிறம் அமைப்பு போன்றவை சுருக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளன. பிறகு அப்பறவையின் வாழிடங்கள் , உணவுப்பழக்கங்கள், போன்றவற்றையும் குறிப்பிட்டு, அவைகளின் கூடுகட்டும் அல்லது இனப்பெருக்கம் பற்றிய குறிப்போடு அப்பறவையைப் பற்றிய விபரம் முடிவடைகிறது. ஒரு பக்கத்துக்கு 2 பறவைகள் பற்றிய குறிப்புகள் உள்ளன. நான் நீளவால் இலைக்கோழியைப் படமெடுத்தபோது அப்பறவையின் பெயரை அக்குளத்தில் குளித்துக்கொண்டிருந்த சில கிராமத்தினரிடம் கேட்ட போது, சரியான தகவல் கிடைக்கவில்லை. பின்னர் அதைப் பற்றிய குறிப்பினை இந்நூல் வழியே (படம் 2) அறிந்துக்கொண்டேன். சில நாட்களுக்கு முன் இப்பறவையை அருகில் உள்ள இன்னொரு ஏரியில் கண்டபோது அவற்றுக்கு இந்த தெளிவான அழகிய, பின்னந்தலை- கழுத்து நிறமும், நீண்ட வாலும் இல்லை. இனச்சேர்க்கை நடைபெறாத குளிர் காலங்களில் இந்த வகை சிறகுகளைக் கொண்டிருப்பதாக ஆசிரியர் இப்புத்தகத்தில் குறிப்பிடுகிறார்.  

 நீளவால் இலைக்கோழி 

 இப்புத்தகத்திற்காக தமிழில் சூழலியல் தொடர்பான கட்டுரைகள் எழுதிவரும் ஆய்வாளர் சு. தியோடார் பாஸ்கரன் நல்ல அணிந்துரை ஒன்றை எழுதியுள்ளார். ஆசிரியரின் பறவைகள் பார்த்தலைப்பற்றிய குறிப்பும், நூல் அமைப்பைப் பற்றிய தகவலும் பயனுள்ளவை. மொத்தம் 328 பறவைகள் பற்றிய குறிப்புகள், அப்பறவைகளின் படங்களுடனும், தமிழ், ஆங்கிலப் பெயர்களும் அதன் குடும்பப்பெயருடன் (அறிவியல்) தரப்பட்டுள்ளது. ஆங்கில தமிழ் நூல் பட்டியலுடன் முடியும் நூலில் ஒரு குறிப்பிட்ட பறவையினைத் தேடுவதற்கு எளிதாக பறவைகளின் தமிழ் அகரவரிசைப் பட்டியல், குடும்பப்பெயர்ப் பட்டியலும் தரப்பட்டுள்ளது. இது தவிர அறிவியற் பெயர் பட்டியலும், ஆங்கிலப் பெயர் பட்டியலும் கூட தரப்பட்டுள்ளது முறையான ஒரு ஏற்பாடாகும். தமிழில் இப்படி தெளிவான முறைமையை ஆய்வு நூல்களில் கூட காணுதல் அரிதாகும். இதற்கு ஆசிரியரின் ஆர்வமே அடிப்படைக் காரணமாக இருக்கமுடியும். ஒரு பயனுள்ள, மிகவும் அழகாகவும், திறம்படவும் தயாரிக்கப்ப நூல். இது பறவை பார்ப்பவர்கள் மட்டுமின்றி தங்கள் நாட்டின் மரபுச்செல்வங்களான பறவைகளைப் பற்றி அறிய விரும்பும் அனைவருக்கும் பயனுள்ள நூல்.இந்நூல் வெளியாகி சுமார் 8 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் பதிவு எழுதப்பட்டாலும், இது நூலின் பேசுபொருளாலும் புதிய-சிறந்த நூட்கள் இல்லாமையினாலும் பழைய நூல் வரிசையில் சேராத புத்தகம் என்றே கருதப்படவேண்டும். மேலும் இது போன்ற புத்தகங்களை வாங்கி பயனடையும் போது இது போன்ற முயற்சிகள் தமிழில் ஊக்கமடையும் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.

தொடர்புடைய மற்ற பறவைகள் தொடர்பான புத்தகங்கள் பற்றிய சுட்டிகள்:
தென் இந்திய பறவைகள்: பறவைகளைப் பற்றிய ஒரு முக்கியமான கையேடு

Comments