பச்சைப் பஞ்சுருட்டான்

பச்சைப் பஞ்சுருட்டான் (Small Bee-Eater, Merops orientalis) அழகான நிறங்கொண்ட பறவை. அதன் பொன்னிற தலையும் பிடரியும் பிரகாசமான ஊதா நிற தாடைப் பகுதியும் அழகான நிறச்சேர்க்கைகள். இப்பறவையை படமெடுக்கவேண்டுமென்பது எனது நீண்ட நாளைய எண்ணங்களில் ஒன்று. எங்கள் வீட்டருகே கூட இவைகள் இந்த மழைக்காலத்தில் சுறுசுறுப்பாக பூச்சிகளை பிடித்துக்கொண்டிருந்தாலும் இவைகள் இங்குள்ள மின்கம்பிகளிலேயே அமர்வதால் புகைப்படமெடுக்க முடியவில்லை. நேற்று இவைகளை தஞ்சைக்கு வெளியியே புஞ்சை நிலப்பகுதிகளில் கண்டபோது கொஞ்சம் முயற்சித்தேன். விளைவு பரவாயில்லை என்றே நினைக்கிறேன். இது பிப்ரவரி முதல் ஜூன் வரை மணற்பாங்கான திட்டுகளிலும் சாலையோர குழிகளிலும் வங்கு குடைந்து 6 முட்டைகள் இடும் என்கிறார் முனைவர் க. ரத்னம் அவரது தமிழ்நாட்டு பறவைகள் என்ற புத்தகத்தில். இந்தப் புத்தகம் மிக அருமையான ஒரு முயற்சி. இதைப் பற்றி பின்னர் எழுதுகிறேன்.


Comments