கோயில்காடுகள்
படம்: தஞ்சை-திருச்சி நெடுஞ்சாலையோரம் திருமலை சமுத்திரம் அருகில் உள்ள கோயில் காடு.
கோயில்காடுகள் என்பவை உள்ளூர்ச் சமூகத்தால் பேணிப்பாதுகாக்கப்படும் சிறுகோயில் சார்ந்த வனப்பரப்புகள். இவைகளோடு பிணைந்துள்ள தெய்வங்கள் நாட்டார் மரபின் மைய இழையாக இருப்பதுடன் மக்களின் வாழ்வாதாரமான நிலம் மற்றும் வாழ்வியல் நம்பிக்கைகளோடும் கலந்தவை. எனவே சமீப காலம் வரை ஒருவித அச்சத்துடனும் மரியாதையுடனும் பல நூற்றாண்டுகளாக பாதுகாக்கப்பட்டு வருகிற இக்காடுகள் இப்போது பல இடங்களில் அழிவை எதிர்நோக்க தொடங்கியுள்ளன. இந்த கோயில் காடுகள் என்பவை பெரும்பாலும் ஊருக்கு வெளியிலோ, வயல்களுக்கு மத்தியிலோ அமைந்த வனத்தீவுகள். இவைகளில் சிறுகோயிலோ அல்லது சிறுதெய்வ வழிபாட்டுக்குரிய மண் அல்லது சுதையாலன சிலைகளோ அல்லது தெய்வங்கள் பேரில் ஊண்றப்பட்ட ஆயுதங்களோ இருக்கும். அவைகளைச் சூழ்ந்து மனித தலையீடற்ற வனப்பெருக்கமும், அவ்வனப்பெருக்கத்துக்கு எற்ற சிற்றுயிர் வளமும் இருக்கும். இக்காடுகளில் உறையும் தெய்வங்களுக்கு நடத்தப்படும் வருடாந்தர பூசைகள், விழாக்கள் கூட இவ்வியற்கைச் சூழலை பெரிதும் பாதிக்காதவாறே ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. இக்காடுகளின் உள்ளே வெகு அரிதாகவே மனிதச் செயல்பாடுகள் நடைபெருவதால் இங்கு இயற்கையான ஒரு வனதொகுப்பு பல்லாண்டுகளாக பேணப்படுகிறது.
இதனால் வேளாண்மை என்ற பெயரால் இயற்கைச்சூழலும், சிற்றுயிர் வளமும் தொடர்ந்து மாற்றத்துக்குள்ளாகி வந்த போதிலும் ஆங்காங்குள்ள இந்த வனத்துளிகளில் அப்பகுதிகளின் பாரம்பரிய தாவரங்களும், சிற்றுயிர் திரளும் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளன. இவ்வகைக்கோயில்கள் காவிரி மற்றும் தாமிரபரணி டெல்டா பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் இருப்பது வேளாண் செயற்பாடுகளால் அதிகம் பாதிக்கப்படும் இப்பகுதிகளில் இயற்கையின் பன்மைத்தன்மையை பாதுகாக்க எடுக்கப்பட்ட ஒரு சிறந்த முயற்சியாகவே தோன்றுகிறது. இல்லாவிடில் பயிர்த்தொழிலும் மக்கள் செறிவும் இப்பகுதிகளில் மனிதனுக்கு நேரடியாகத் தேவையற்றவைகளாகத் தோன்றும் உயிரினங்களை மிக எளிதில் பூண்டற்றுப் போகச்செய்திருக்கும். மேலும் இக்காடுகள் வயல்களுக்கு நடுவில் இருப்பதால் பறவைகள்/ பாம்புகள் போன்றவைகள் தங்கி உணவுச்சங்கிலியைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும் உதவுகின்றன. இவ்வகையில் இவை விவசாயத்துக்கு நேரடியாக உதவுகின்றன. இவைகளைப் பற்றிய சமூகப் புரிதலும் கூட இவ்வனத்தொகுதிகள் காப்பாற்றப்பட்டு வந்ததன் பின்னனியில் இருக்கலாம்.
இக்கோயில் காடுகள் இப்போது அழிவின் விளிம்பில் இருக்கின்றன. காரணங்கள் பல என்றாலும் முக்கியமானவை, வேளாண்சமூகம் தொழிற் சமூகமாக மாற்றமடைவதே ஆகும். இதனால் மரபுசார்ந்த இயற்கைத்தெய்வங்கள் வாழ்கையில் இருந்து அன்னியமாதல் நடைபெருகிறது. வேளாண் நிலங்கள் குடியிருப்புகளாகவும், சிறப்பு பொருளாதார மண்டலங்களாகவும், புறநகர்களாகவும் மாற்றமடையும் நேரத்தில் இக்காடுகள் தம் இருத்தலுக்கான காரணத்தை இழக்கின்றன. இது பலநூற்றாண்டுகளாகப் பாதுகாக்கப்பட்டு வந்த பல்லுயிரியத்தை அழிவுக்கு நகர்த்துகிறது.
திருமலை சமுத்திரத்தில் உள்ள கோயில்காட்டில் அப்போது காணப்பட்ட சில காட்டுயிர்கள்..
சின்னான் (Red vented Bull Bull),
Comments