நீளவால் இலைக் கோழியும் அல்லி மலர்களும்

jacana2
jacana-female
கடந்த மார்ச் மாதம் தஞ்சை நாகப்பட்டிணம் சாலையில் பூண்டியைத் தாண்டியவுடன் சாலையோரம் உள்ள ஒரு அம்மன் கோவிலருகில் உள்ள குளத்தில் சில அழகிய பறவைகளைக் கண்டேன். அவைகள் அக்குளத்தில் நிறைந்திருந்த தாமரை இலைகளின் மேல் மிக நளினமாக நடந்து நீர்ப்பூச்சிகளை உண்டவாறு இருந்தன. அவற்றில் ஆண் பறவைகளுக்கு அழகான நீண்ட ஒற்றை இறகினைக்கொண்ட கருப்பு நிற வால் இருந்தது. அவைகளின் இறக்கைகளின் மேல்புறமும் அடிப்புறமும் ஆழ்ந்த தேன் நிறத்திலும் அவற்றின் நடுவே வெண்நிறத்தில் அமைந்த உள் இறக்கைகளும் இருப்பதைக் காணமுடிந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக அவைகளின் முகமும், முன் கழுத்தும் வெண்மையாக இருக்கையில் அவற்றின் பின் கழுத்து சற்றே வெளிறிய பொன் நிறமாக இருப்பது மிக அழகான தோற்றமாக இருந்தது. இது ஆண் பறவையின் தோற்றம். பெண் பறவை நீண்ட வாலின்றியும், தங்க நிற பின்கழுத்துப்பகுதி இன்றியும் அதிக வெள்ளை நிறத்தை உடலில் கொண்டு, தெளிவான நிறப்பகுதிகள் இன்றி காணப்பட்டது. ஆண் பறவைகளின் நீண்ட ஒற்றை வால் அது கழுத்தை நீட்டி பூச்சிகளைத் தாவிப் பிடிக்கையில் அப்பறவை விழாமல் சமனப்படுத்த உதவும் என்று நினைக்கிறேன். அதோடு கூட அவ்வாலும் பொன்நிறமும் இனப்பெருக்கக் காலத்தில் இணைகளை கவருவதற்கான இயற்கை உத்திகளாகவும் இருக்கலாம். அவற்றின் கால்களும் விரல்களும் இலைகளின் மேல் நடப்பதற்கு ஏதுவான வகையில் இருந்ததன். நீண்ட நான்கு விரல்களும் இலைகளின் மேல் நிற்கையில் இலையை கிழித்துவிடாதவாறு உடல் எடையை இலைப்பரப்பின் மேல் பரவலாக்க உதவும் வகையில் இருக்கிறது. ஆர்ட்டிக் பகுதிகளில் இனுய்ட்டுகளின் காலணிகள் இப்படி உடல் எடையை பனிப்பரப்புகளின் மேல் பரவலாக செலுத்தும் வகையில் செய்யப்பட்டிருப்பது நினைவுக்கு வந்தது. நீர்வாழ் தாவரங்களில் வசிக்கும் பூச்சிகளே இப்பறவைகளின் முக்கிய உணவாகும் இருக்கும் என்று நினைக்கிறேன். இப்போது செப்டம்பரில் இந்தக்குளத்தையும், பறவைகளையும் கண்டு வரலாம் என்று சென்றபோது அக்குளத்தில் தாமரை சற்றும் இல்லாது அல்லி மலர்களே நிறைந்திருக்கக் கண்டேன். நீரின் அளவு அப்படியே இருக்க இப்படி நீர்வாழ் தாவரம் மட்டும் மாறி இருப்பதன் காரணம் தெரியவில்லை. அதே போல இப்பறவைகளையும் அக்குளத்தில் காணவில்லை.

IMG_4642
IMG_4646

Comments