நெருப்பின் அன்ன செந்தலை அன்றில்

மஞ்சள் மூக்கு நாரை
இந்த ஆண்டு மார்ச் 10ஆம் நாள் நாங்கள் அங்கு சென்றோம். அங்கு போவதற்காக நாங்கள் பெரிய திட்டங்கள் எதையும் தீட்டவில்லை. நான் மதுரைக்கு வந்திருந்தேன். பாலுவும் கனடாவில் இருந்து வந்து சில மாதங்களே ஆகியிருந்தன. மதுரையில் வேலை முடிந்த பின் உடனே ஊர் திரும்ப வேண்டிய அவசியம் இருக்கவில்லை. இன்னொரு நண்பரிடம் எனது பெட்டியை மட்டும் வீட்டுக்குக் கொண்டு செல்லச் சொல்லிவிட்டு நாங்கள் இருவரும் மதிய உணவுக்குப் பின் மதுரையில் இருந்து கிளம்பினோம். இப்படி கொஞ்சம் நீண்ட பயணத்தை முடிவு செய்ய இன்னுமிரண்டு காரணங்கள் இருந்தன. அவை பாலுவின் புது பல்சர் 270சிசியும் புதிய 4 வழிச்சாலையும். நாங்கள் திருநெல்வேலியை அடைந்த பொழுது மாலை ஆகியிருந்தது. திருநெல்வேலியிலேயே இரவு தங்கலாமா என்று கணப்பொழுது தோன்றியதை அங்கேயே விட்டுவிட்டு உள்ளே போகாமல் NH7 இல் விரைந்து நான்குநேரியை அடைந்த போது வெளிச்சம் வெகுவாக குறைந்திருந்தது. இருட்டவில்லை. அப்போதுதான் 'புலிநகக்கொன்றை' வாசித்திருந்தேன். மோகமுள்-கும்பகோணம் போல மிகப்பெரிய கிளர்ச்சியை ஏற்படுத்தவில்லை. ஆயினும் ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டே போனோம். அங்கே வழிகேட்டு கிளைச்சாலையில் பிரிந்தபோதுகூட தோன்றியது இரவு அங்கேயே தங்கி விடலாமா என்று. ஆனால் தங்குவதற்கு விடுதிகள் இல்லை. மேலும் போய்ச்சேர்ந்துவிடலாம் என்ற எண்ணம் வேறு இழுத்துக்கொண்டே இருந்தது. சாலை பெருமளவுக்கு மோசமாகத் தான் இருந்தது. எனவே நீண்ட நேரம் பிடித்தது. கூந்தங்குளம் போய்ச்சேறும் போது நன்றாக இருட்டி விட்டது. 8 மணி இருக்கும். பால்பாண்டியைப் பற்றி விசாரித்தால் அங்கேயே இருந்தார். கூந்தங்குளம் சாலைத் திருப்பம் தான் சில கடைகள் இருக்கும் இடமும், மாலையில் ஊர்ச் சதுக்கமும். அவருடன் அறிமுகமாகி, இரவு உணவை அருகில் இருந்த ஒரே கடையில் முடித்துக்கொண்டு ஏரியை நோக்கிச் சென்றோம். ஏரிக்கரையிலேயே வனத்துறையின் அலுவலகமும், திறக்கப்படாத பயணியர் தங்கும் இல்லமும் இருந்தன. பால்பாண்டிக்கு இருந்த அறையில் இன்னும் மின்வசதி வரவில்லையாதலால் நாங்களும் அவருடன் ஏரிக்கு மிக அருகில் இருந்த கண்காணிப்புக் கோபுரத்தின் மேலேயே படுத்துக்கொண்டோம். ஏரி இருட்டாக, அமைதியாக அடியில் இருந்தது.  பால்பாண்டியோடு பேசிக்கொண்டிருந்தோம். கூந்தங்குளம் ஏரியின் உயிர் பறவைகள் என்றால் பால்பாண்டி அதன் உயிராதாரம். எனக்குத் தெரிந்த ஒருவர் வீடு கட்டினார். அது அவரது வாழ்நாள் கனவு. காலையில் எழுந்தவுடன் வீட்டை ஒருமுறை சுற்றி வருவார். சுற்றி வருதல் என்றால் நடப்பது அல்ல. உயிரால் ஒவ்வொரு செங்கலையும் தொட்டுப்பார்ப்பது; ஒவ்வொரு செங்கலையும் உயிரால் கேட்பது; பூச்சு இலேசாக உதிர்ந்திருக்கக் கண்டால் உயிரைக் கொண்டு பூசுவது. ஒரு ஏரியையும் அதற்கு வரும் பறவைகளையும் , குஞ்சுகளையும் பறவைகளையும் ஒருவர் அப்படிச் சுற்றிவந்தால் அவர் பெயர் பால்பாண்டியாக இருக்கும். இயற்கையையும் சூழலையும் குறித்து தமிழர்கள் இப்படி பொறுப்பற்றவர்களாக இருக்கிறோமே என்று பல நேரங்களில் நினைப்பதுண்டு. இயற்கை இப்படித்தான் அதைச் சமன் படுத்தமுடியும் போலும். ஆனால் ஊருக்கு ஒருவர் இப்படி இருந்தால் நன்றாயிருக்கும் என்பது உண்மையிலேயே பேராசையாகத்தான் இருக்கும்.      
பால்பாண்டி


காலையில் எழும்போது அவர் பக்கத்தில் இல்லை. கழுத்தில் பைனாக்குலருடன் சிறிது நேரத்தில் வந்தார். வனத்துறையின் காவலர்கள் இருவர் இருக்கிறார்கள். ஒருவர் எங்களோடு பேசிக்கொண்டே கண்காணிப்புக் கோபுரத்தில் ஏறி இறங்கிக்கொண்டிருந்தார். சர்க்கரை நோய். பால்பாண்டி வனத்துறையே வலிந்து ஏற்றுக்கொள்ளவேண்டிய காவலர். தகவல் களஞ்சியம். பல பறவையினங்களை இனங்கண்டு, பாதுகாத்து அதை ஆவணப்படுத்தி இருப்பவர். பறவைக்குஞ்சுகளைக் காப்பாற்ற தமது சொந்தப் பணத்தைச் செலவழிப்பவர். பல பறவை ஆர்வலர்களுக்கு கூடங்குளத்தின் இணைப்புபுள்ளி. அவரது மனைவி வள்ளித்தாய் உண்மையிலேயே உயிரைக் கொடுத்து பறவைக்குஞ்சுகளைக் காப்பற்றிவந்தவர். பறவைக்குஞ்சுகளுக்கு வாய் வழியே பால் கொடுத்து காப்பாற்றும் முயற்சியில் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி நோயுற்று இறந்தவர். இருவரும் எந்த அரசுப்பணியிலும் (வனத்துறை உட்பட) இருந்துகொண்டு இவற்றைச் செய்யவில்லை என்பதை குற்ற உணர்ச்சியோடு குறிப்பிடத்தான் வேண்டும். ஏரியில் நாட்டுக்கருவேல மரங்கள் நிறைய இருந்தன. அவற்றில் எல்லாம் பறவைகள். ஒரு மரக்கூட்டம் முழுவதும் மஞ்சள் மூக்கு நாரைகள் (Painted Storks). பிறகு தான் தெரிந்தது இந்த மஞ்சள் மூக்கு நாரைகள் ஊரில் இருந்த எல்லா மரங்களிலும், சாலையோர மரங்கள், வீட்டில் உள்ள மரங்கள் என எல்லாவற்றிலும் குழுமியிருக்கக் கண்டோம். ஊர்மக்களும், தங்கள் ஊரே ஒரு பறவைக்காடாக இருப்பதை ஏற்றுக்கொண்டிருப்பதைக் காணமுடிந்தது. மக்களும் பறவைகளும் வீதிகள் வயல்வெளிகள் என்று எல்லா இடங்களிலும் உறவாடியபடியே உள்ளார்கள்.   வானில் இந்த நாரைகளும் கூழைக்கடாக்களும் பறப்பது ஒரு வித சர்ரியலிசக் காட்சிபோல இருந்தது.  ஏரியில் ஏராளமான நீர்ப்பறவைகள் இருந்தன.  நாங்கள் காலை 11 மணி வரை புகைப்படங்களை எடுத்துக்கொண்டிருந்தோம். கொக்குகள் (Egrets), கறுப்பு அறிவாள் மூக்கன், வெள்ளை அறிவாள் மூக்கன் (White Ibis), பூநாரைகள் (Flamingos), கூழைக்கடா (Pelican), வாத்துகள் (Ducks), நீர்க்காகங்கள் (cormorants), நாரைகள் (storks) மற்றும் பல பறவைகளையும் கண்டோம். பலவற்றை படமெடுக்க முடிந்தது.  உச்சந்தலையில் முக்கோண வடிவ சிவப்புச் சதைவளர்ச்சிக்குமிழிகளைக் கொண்ட இந்த கறுப்பு அறிவாள் மூக்கன் தான் சங்க இலக்கியங்களில் பனைமரங்களை வாழிடமாகக் கொண்ட 'நெருப்பினன்ன செந்தலை அன்றில்' என்று குறிப்பிடப்படுவது என்பதை 'தமிழ்நாட்டுப் பறவைகள்' நூலின் மூலம் பிறகு அறிந்து கொண்டேன். அதிக நேரமும், ஓய்வான மனநிலையும் இல்லாத காரணத்தால் நாங்கள் உடனே திரும்ப நேர்ந்தது. ஆனாலும் இப்பயணத்தில் ஒரு அருமையான மனிதரையும், அவரது ஈடுபாட்டால் விளைந்த ஒரு அற்புதத்தையும் காண முடிந்ததே பறவைகளைக் காணுவதைக் காட்டிலும் நிறைவளிப்பதாக இருந்தது. திரும்பும் போது நான்குநேரிச் சாலையைத் தவிர்த்து, மூலக்கரைப்பட்டி, இட்டேரி, வழியாக ரெட்டியார்பட்டியில் NH7 இல் இணைந்து கொண்டோம்.


ஏரியில் பறவைகள்

மக்களும் பறவைகளும்
கறுப்பு அறிவாள் மூக்கன்
'நெருப்பினன்ன செந்தலை அன்றில்'

பெரிய கொக்கு
வாத்துக்கூட்டம்
வெள்ளை அறிவாள் மூக்கன்
மஞ்சள் மூக்கு நாரை
குருட்டுக்கொக்கு

Comments

மீண்டும் உங்களை வாசிப்பதில் மகிழ்ச்சி, அதுவும் சிறப்பான புகைப்படங்களோடு. உங்களது காட்டுக்குள் எங்களை மேலும் அழைத்துச் செல்வீர்கள் என்று நம்புகிறேன்..