கரும்பிடரி நீல ஈப்பிடிப்பான்





சாலீம் அலியின் பிறந்தநாள் நவம்பர் 12.

வழக்கம் போல போனதுதான் அன்றும். குளத்துக்கு வலசை வந்த பறவைகளைப் பார்த்துக்கொண்டிருந்தவன், இந்தப்பக்கம் முன்பு வயலாய் இருந்த பகுதியில் இருந்த வரப்பில் முழக்கால் உயரத்தில் வெட்டப்பட்டிருந்த ஒரு பனையில் உட்கார்ந்திருந்தேன். தொலைவில் மூன்று பனங்காடைகள் சச்சரவிட்டுக்கொண்டு சண்டையிட்டவாறே பறந்து பறந்து மரத்தில் அமர்ந்துகொண்டிருந்தன. அன்றைக்குப் பார்த்த மூன்றாவது பனங்காடை சண்டை அது. அது என்னவோ அந்த மூன்று சண்டைகளிலும் வெவ்வேறு மூன்று பனங்காடைகள் தங்களுக்குள் சச்சரவிட்டுக்கொண்டிருந்தன. இனச்சேர்க்கைக்கான போட்டியோ என்னவோ தெரியவில்லை. அப்போது தலைக்குமேல் ஒரு பறவைக்குரலைக் கேட்டு நிமிர்ந்தேன். அந்தப்பறவை ஒரு ஒரு அரை அடியைவிட சிறியதாகத் தோற்றமளித்தது. முதல்பார்வைக்கு சின்னானோ என்று நினைத்தேன். அதன் தலை அப்படி இருந்தது. ஆனால் தலை சற்றே நீல நிறமாக இருந்த்து. ஈப்பிடிப்பானைபோன்ற அலகும் அதனடியிலான மயிர்களும் இருந்தன. ஒருவேளை ஆசிய வேதிவால் ஈப்பிடிப்பானின் குஞ்சொன்றாக இருக்குமோ என்றுகூட தோன்றியது. ஆனால் அக்குஞ்சுகளின் வால் இதனினும் மிகச்சிறியதாக இருக்கும். சட்டென சில கிளைகளுக்கு இடம் மாறி பறந்தது. பிறகு நினைத்துக்கொண்டதுபோல அந்தமரத்தில் இருந்தே பறந்து தொலைவில் மறைந்தது.

***
ஒரு பறவை அந்தப்பொழுதினில் என்னிடம் சொல்லிச்சென்றது என்ன என்று கேட்டுக்கொண்டிருந்தேன். என்னிடமா? மனிதனாய் இருப்பதன் தலையாய பிரச்சனை இதுதான். அவன் எல்லாம் தன்னிடம், தனக்காக, தன்பொருட்டு நடப்பதாய் நினைப்பதுதான். அல்லது நிகழ்வுகளின் நடுவில் என்னை நானே உட்காரவைத்துக்கொள்வது. நான் அந்தப்பனங்கட்டையில் உட்காந்திருந்தேன். அது சரியானது. அந்தக்குருவி அருகில் இருந்த நாட்டுப்பூவரசின் கிளையில் வந்து உட்கார்ந்த்து. பிறகு சில சொற்களைச் சொன்னது. அதுவும் சரியானதுதான். நான் எழுந்து நின்று கவனித்தேன். அந்தப்பறவை ஒரு போதும் அறிந்திராத அதன் பெயரைத் தேடிக்கொண்டிருந்தேன். அது என்ன உண்ணும் என்று அதன் அலகை கவனித்துக்கொண்டிருந்தேன். அதன் உருவம் எத்தனை பெரிதென்றும், அது எந்தப்பறவையினை ஒத்தது என்றும் என்னையே கேட்டுக்கொண்டிருந்தேன். இதற்கு நடுவில் என்னுடைய லென்ஸ் வேலை செய்துகொண்டே இருந்தது. அதன் குரல் என் தலைக்குள்ளேயே நுழையவில்லை. அப்படியே நுழைந்திருந்தாலும் அது என்ன சொல்லிக்கொண்டிருந்தது என்பது எனக்குத் தெரிந்திருக்காது. ஒரு பறவையோடு இருப்பது எப்படி என்று நான் இப்போது நினைக்கிறேன். நான் கேள்விகள் அற்று என்னோடு எப்போது இருப்பேனோ அப்போது பறவைகள் என் தோளில் கூட வந்திருக்கலாம். நான் அவைகளின் தோளைக்கூட அப்போது வருடநேரலாம்.

***

பிறகு தேடித்தெரிந்துகொண்டது. அந்தப்பறவைக்கு நாமிட்ட பெயர் கரும்பிடரி நீல ஈப்பிடிப்பான் (Black-naped monarch or Black-naped blue flycatcher). அது இந்த ஊர்ப்பறவிதான். பூச்சிகளைச் சாப்பிடுகிறது..அன்றுதான் நான் பார்த்தேன் (Lifer). 

Comments