நத்தைகுத்தி நாரை



நத்தைகுத்தி நாரை  (Open billed Stork) என்ற பெயரே அதன் உணவுத்தட்டில் என்ன இருக்கும் என்பதைச் சொல்லிவிடுகிறது. ஆனாலும் சில சமயம் நாம் என்ன சாப்பிடுகிறோம்!  நம்பமுடியாத விசயங்களையெல்லாம் நாம் சாப்பிடுகிறோம். சின்ன வயதில் பள்ளிக்கு அவ்வவ்போது வித்தைக்காரர்கள், கழைக்கூத்தாடிகள், காகிதத்தில் பூக்கள் செய்பவர்கள், சைக்கிள் சாகசக்காரர்கள், கரடியை வைத்து சின்ன சாகசங்களைச் செய்பவர்கள், மேஜிக் நிபுணர்கள், குரங்காட்டிகள் இப்படிப்பட்ட சாதரணமான மக்கள் கலைஞர்கள் வருவார்கள். அவர்களில் சிலர் ஆசாத்தியமான திறமையும் கலை உணர்வும் கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பது இப்போது நினைவுக்கு வருகிறது. அது அரசுப்பள்ளியாதலால் இப்போதைய தனியார் பள்ளிகள் போன்று பெரிய கதவுகள் அதற்கு இல்லை.  கதவுகள்.

ஒருமுறை ஒரு கழைக்கூத்தாடி வந்தார்.  இரும்பு வளையங்கள் சின்னதாகிக்கொண்டிருந்தன. ஆனால் அவரோ நாங்கள் முடியவே முடியாது என்று நினைக்கும் வளையங்களுக்குள் எல்லாம் காலை விட்டு தலை வழியே எடுத்தவாறிருந்தார். பெண்குழந்தைகள் இல்லாத பள்ளி. இல்லாவிட்டால் ஒரு கைவளையலை வாங்கி உள்ளே நுழைந்திருப்பார் என்றுதான் நினைத்தேன். பிறகு அவர் நீண்ட கம்பியொன்றை எடுத்தார். ஒரு பையனை அழைத்தார். கம்பியைத் தொட்டுப்பார்க்கச்சொன்னார். வளைக்கச்சொன்னார். அவனால் முடியவில்லை. மெல்ல மூச்சுவிட்டுக்கொண்டு கொஞ்சம் தண்ணீர் குடித்தவர் ஒரு காலை பின்னே நீட்டி இன்னொருகால் முட்டியை மடக்கி அந்தப்பையனின் உயரத்துக்கு வந்தார். கம்பியின் ஒரு முனையை தொண்டைக்குழியிலே வைத்தார். மறுமுனையை தனக்குப் பின்னால் திரும்பித்திரும்பி கூட்டத்தைப்பார்த்துச் சிரித்துக்கொண்டிருந்த அச்சிறுவனை அழைத்து அவன் உள்ளங்கையில் வைத்து அழுத்தச்சொன்னார். அவனை கவனமாக அழுத்தவேண்டும் என்று  தொண்டையில் இருந்த கம்பியின் முனையை  கையில் பிடித்துக்கொண்டு சொன்னார். மெல்ல சரியான இடம் தேடி, கழுத்தில், தொண்டைக்குழியில் வைத்தார். கையத்தட்டினார். மெல்ல தலையை முன்னும் மின்னும் அசைப்பது போல இருந்தது. ஒரு மெல்லசைவில் தொண்டைக்குழிக்கும் பையனின் உள்ளங்கைக்கும் நடுவில் இருந்த கம்பி சட்டென ஒரு தொட்டிலைப்போல வளைந்தது. இன்னும் கொஞ்சம் தலையை அசைத்து கால்களை முன்னே கொண்டுவந்து அதை ஒரு ‘U' போல வளைத்தார்.  அச்சத்தால் கண்களை மூடிக்கொண்டிருந்த பையன்கள் கூட ஆச்சர்யத்தோடு சிரித்தார்கள். பிறகு அவர் மளமளவென்று டியூப் லைட்டுகளை நெஞ்சிலும், முதுகிலும் தலையிலுமாக உடைத்தார். இறுதியாகச் செய்த காரியம் தான் நமது மூச்சைப்பிடித்து நிறுத்தியது. உடைந்த ஒரு துண்டு டியூப் லைட் துண்டை எடுத்து எல்லோரிடமும் காட்டிவிட்டு வாயில் போட்டு கறகறவென்று கடித்து ஏதோ எலும்பைக் கடிப்பது போலக் கடித்து விழுங்கினார். 35 வருடங்களுக்கு முன் பள்ளிக்கூட பையன்கள் என்ன காசு வைத்திருப்பார்கள் அப்போது? 5 காசும் 10 காசும் அவரது ஏந்திய கைகளில் இருந்த கைக்குட்டையில் விழும். எல்லோரும் அவரது முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஆசிரியர்கள் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் கொடுப்பார்கள்.

இந்த மாதிரி வித்தைக்காரர்கள் பிழைப்பில் எல்லாம் காலம் மண்ணள்ளிப் போட்டுவிட்டது. அவராவது கண்ணாடித் துண்டைத்தான் சாப்பிட்டுக்காட்டி  சில்லறைக் காசுகளை வாங்கிப்போனார். இப்போது அவனவன் மெனுக்கார்டைப் பார்த்து விசத்தை வாங்கி தின்றுவிட்டு அமிலத்தை ஸ்ட்ரா போட்டுக் குடித்துவிட்டுச் செல்கிறான்.  அன்றைக்கு அப்படித்தான்  ஒருநாள்,   கதவைத்திறந்து விட்டவுடன் அந்தக்குளிரூட்டப்பட்ட அறைக்குள் கிட்டத்தட்ட உருண்டே வந்த ஒரு வித்தைக்கார குழந்தையும் தகப்பனும் பீட்சாக்களைத் தங்கள் வாயில் திணித்துக்கொண்டு, அவ்வவ்போது குளிரூட்டப்பட்ட  அமிலத்தைக் குடித்துவிட்டு கடைசியில்  கைகளைத் தட்டி தங்களைத்தாங்களே மெச்சிக்கொண்டார்கள். மறக்காமல் கற்றை கற்றையாய் ரூபாய் நோட்டுக்களை கெளரவமாக ஒரு அட்டையில் வைத்துக் கொடுத்துவிட்டு மறுபடியும் உருண்டவாறே வெளியேறினார்கள். உண்மையில் சமூகத்தில் மரபுகள் ஒரு அடையாளமாக பல ஆயிரம் ஆண்டுகள் கூட தொடர்வதுண்டு. அப்படித்தான் வித்தைக்காரர்களின் மரபுகள்  கூட பெரிதும் மாறாமல் இருக்கும் போல. ஆம் நான் பார்த்தேன். அந்தக்கழைக்கூத்தாடியும் சரி, சர்க்கஸ் வீரரும் சரி, பல்டி அடித்தவாறே உள்ளே வந்தார்கள், வெளியே போனார்கள். உருண்டு வருவதும் ஒரு மரபு போலும்.

இந்த சைக்கிள் வித்தைக்காரர்கள் சைக்கிளில் உட்கார்ந்து, நின்று, படுத்து, தவழ்ந்து ஓட்டுவார்கள். சைக்கிள் ஓடும் போது ஓசை எழுப்ப ஒருமாதிரி ஒரு டால்டா டின்னைக் கட்டி வைத்திருப்பார்கள் அது ஓசை எழுப்பியபடியே இருக்கும். கடைசியாக, ஒரு கைக்குழந்தையை தலையில் ஏந்தி, அல்லது ஒரு கழியின் முனையில் தாங்கி, அல்லது சைக்கிள் எங்காவது தொங்கவிட்டவாறு தவழ்ந்துகொண்டே வண்டியை ஓட்டுவார்கள். இப்போது பல்சரிலும், இன்னும் பல வகையான பைக்குகளில் உட்கார்ந்து, தவழ்ந்து, படுத்து ஓசை எழ வித்தைகளைச் செய்கிறார்கள். என்ன யாரும் காசு போடுவதில்லை. எல்லோராலும் செய்யமுடிந்த வித்தைகளுக்கு யாரும் காசு போடமாட்டார்கள் தானே! அன்று பார்க்கிறேன், ஒரு வயது குழந்தை ஒன்று ஜொள்ளை ஒழுகவிட்டுக்கொண்டு பல்சரில் முன்னால் உட்கார்ந்து, பிறகு நின்று கொண்டே வித்தைக் காட்டிச்சென்றது. ஓட்டிய தகப்பன் முகத்தில் அத்தனை பெருமிதம். இருக்காதா பின்னே! தன் மகனைச் சான்றோன் எனப்பார்த்த தருணம்.

இந்தக் கரடி வைத்து வித்தை காட்டுபவர்களைப் பற்றித்தான் நீங்களும் யோசித்துக்கொண்டிருப்பீர்கள்  என்று தெரியும். அதை இன்னொருநாள் எழுதுகிறேன்.

***

இந்த நத்தைகுத்தி நாரை இருக்கிறதே கண்ணாடியையோ, அமிலத்தையோ சாப்பிடவில்லை; நான் பார்க்கும் போது வித்தியாசமாக நன்னீர் நண்டைச் சாப்பிட்டுக்கொண்டிருந்தது. அதில் சிறப்பம்சம், அதை தன் அலகால் எடுத்து தண்ணீரில் இரண்டுதடவை அலசிச் சாப்பிட்டது. விரதமாயிருக்கும்.

Comments

நத்தைகுத்தி நாரையைப் பற்றி சொல்லவந்து வேறு ஏதேதோ சொல்லிவிட்டீர்கள்.