துடுப்புவால் கரிச்சான்
சில ஆண்டுகளுக்கு முன் (2013) கேரள மாநிலத்தில் உள்ள நண்பர் ஒருவரது வீட்டுக்குச் சென்றிருந்தோம். அது பாலக்காட்டுக்குப் பக்கத்தில் உள்ள ஒரு சிறிய ஊர். நிறைய மரங்களும், வயல்களும் இருந்தன. நண்பரது வீட்டைச்சுற்றிலும் நிறைய மரங்கள். அங்கு எடுக்கப்பட்ட படங்களை இன்று மறுமுறை பார்த்தபொழுது, அதில் துடுப்புவால் கரிச்சானின் (Greater Racket-tailed Drongo) படங்கள் சில இருந்தன. எனக்குக் கரிச்சான் ஒரு பிரியமான பறவை. அதன் துணிவு பேர் போனது. காக்கைகளையும், இன்னும் சில நேரம் தனது எல்லைக்குள் வரும் பல பெரிய வேட்டைப் பறவைகளைக்கூட துரத்திச்செல்லும். அதனால் சில பறவைகள் கரிச்சான் கூடுகட்டியிருக்கும் அதே மரத்தில் பாதுகாப்பு கருதி தங்கள் கூடுகளையும் அமைத்துக்கொள்ளும். பூச்சிகளைப் பிடிக்கும் அதே இலாவகத்தில் அது பறவையின் மேல் தாக்குதலைத் தொடுக்கும். எப்போதும் கவனமாய் இருக்கும். அதைப் பார்க்கும் போது ஏனோ ஜப்பானிய சாமுராய்களின் நினைவு வரும்.
இந்தத் துடுப்புவால் கரிச்சானைப் பார்த்தவுடன் கண்ணில் படுவது அதன் நீண்ட துடுப்பு போன்ற வால்தான். நீண்ட கம்பியின் முனையில் இணைக்கப்பட்ட துடுப்புபோல இருக்கும் வால் ஏற்கனவே கம்பீரமான கரிச்சானை இன்னும் அழகாக்குகிறது. அப்புறம் மேல் நோக்கிவளைந்த கொண்டை, இப்போதெல்லாம் சில பையன்கள் 'Spike' வைத்துக்கொள்கிறார்களே அதைப்போன்று இருக்கிறது. மூன்றாவது படத்தில் உள்ள கொண்டையைப் பாருங்கள்! சற்றே பெரிய உருவமும், பின்னோக்கி வளைந்த கொண்டையும், தலைகீழ் ‘V" போன்ற பிளவுபட்ட வாலும் இதை Lesser Racket-tailed Drongoவில் இருந்து வேறுபடுத்துகிறது. இந்தக்கொண்டை இளம் பறவைகளில் அவ்வளவு தெளிவாக உருவாகாமல் இருக்கலாம். சில பறவைகளில் இந்த இரண்டு துடுப்பு வால்களில் ஒன்று உடைந்தோ, காணாமலோ போயிருக்கும். இது பெரிதும் பூச்சிகளை வேட்டையாடி உண்ணுகிறது. சில சமயம், பூக்களில் இருந்து தேனையும் உட்கொள்கிறது.
Comments