அரசவால் ஈப்பிடிப்பான், Asian Paradise Flycatcher
வேதிவால்க் குருவி, அரசவால் ஈப்பிடிப்பான் (Asian Paradise Flycatcher) என்றெல்லாம் அழைக்கப்படும் இந்தப்பறவை ஒன்றை நேற்று வீட்டின் மாமரத்தில் இருந்து பறந்து சென்றதைப் பார்த்தேன். அது ஒரு முதிரா இளம் பறவையா இருக்க வேண்டும். இன்னும் நீளாத செம்பழுப்பு நிற வால்.
இந்தப்பறவைய முதன் முதலில் 2013இல் கும்பகோணத்துக்கு அருகில் ஒரு சிறுகிராமத்துக்கு நாங்கள் குடும்பத்தோடு சென்ற போது கண்டேன். எல்லா முதல் காட்சியைப் போல வியப்பால் உள்ளம் பூரித்து உள்ளுள் பரவசத்தால் நடுங்க நேர்ந்தது. அதைப்பற்றிய பழைய பதிவு இங்கு. அதற்குப் பிறகு கேரளத்தில் நண்பரின் தோட்டத்தில்.
எத்தனை முறை பார்த்தாலும் முதிர்ந்த ஆண் பறவையின் அந்த அருவி போன்ற நீண்ட வாலையும், அழகிய அடர்நீலத் தலையையும் பார்க்கையில் வியப்பால் திகைக்காமல் இருக்கமுடியாது.
கோவிலடி என்கிற கொள்ளிடக்கரையோர கிராமத்துக்கு வெளியே அமைந்த சாலையில் நான் பல அழகிய பறவைகளைக் கண்டிருக்கிறேன். அப்படி ஒரு முறை அங்கிருக்கும் போது இந்த ஈப்பிடிப்பானைக் காண நேர்ந்தது. வியப்பின் துளிர் பரவசத்தால் நடுங்கிக்கொண்டிருக்கையில் இப்படங்களை எடுத்தேன். ஒளிரும் பட்டன் கண்களும், கொண்டையும் அதன் ஒய்யாரமான வாலசைவுகளுக்கும், சிறு பறத்தல்களுக்கும் கனகச்சிதமாகப் பொருந்திப்போயிருப்பதை எப்போதும் வியக்கிறது மனது.
இந்த ஆண் ஈப்பிடிப்பான்கள் பருவகாலத்தில் இரண்டு வகையான உருமாற்றங்களைக் கொள்கின்றன. செம்பழுப்பு நிற உருமாற்று அல்லது வெள்ளை நிற உருமாற்று. எப்படியிருப்பினும் நீண்ட வால் கொண்ட ஆண்களே பெண் ஈப்பிடிப்பான்களால் மிகவும் விரும்பப்படும் இணைகளாக இருக்கின்றனவாம். அவைகள் ஒப்பீட்டளவில் குட்டையான வால் கொண்டவைகளைவிட விரைவாகவும், அதிகமாவும் இணைகளாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனவாம். சோழியன் குடுமி சும்மா ஆடாதென்று ஒரு நம்மிடம் ஒரு பழமொழி இருக்கிறதல்லவா!
Comments