|
கும்பகோணத்தில் கண்ட அரசவால் ஈப்பிடிப்பான் ஆண் |
|
மிதந்தலைந்து ஈப்பிடிக்கும் அழகு |
|
கேரளத்தில் கண்ட பெட்டை |
|
கேரளத்தில் கண்ட பெட்டை |
|
கேரளத்தில் கண்ட ஆண் பறவை |
இந்த வால் கொண்டலாத்தி அல்லது அரசவால் ஈப்பிடிப்பானை (Asian Paradise-flycatcher) நான் முதலில் கண்டது கும்பகோணத்துக்கு அருகில் உள்ள கிராமத்தின் சோலையில். பார்த்தவுடன் பத்திக்கொண்டது என்று தமிழ் சினிமா மொழியில் சொன்னால் அது குறைவில்லை. அது ஒரு சிறுமரக்கிளையில் இருந்தது. இரட்டை வால்களைக் கொண்ட காற்றாடிப்பட்டங்களைப் பார்த்திருக்கிறீர்களா? அதன் நீண்ட வால், மற்றும் கண்ணைச் சுற்றிய சாம்பல் நிற வளையங்கள் மட்டுமல்ல செம்மீசைச் கொண்டைக்குருவிக்கு இருப்பதை ஒத்த கொண்டை ஒன்றும் நம் கவனத்தை முதலில் ஈர்க்கும். மரச்செறிவுக்குள் அது தனது நீண்ட கொடிவாலை தொங்கவிட்டபடி உட்கார்ந்திருந்தது. அது ஒரு ஈப்பிடிப்பான் என்று முதலில் நான் அறிந்திருக்கவில்லை. அதன் கொண்டையும், தலையும் கருமைகொண்டிருக்கையில் அதன் மார்புப்பகுதி வெண்மையாய் இருந்தது. அதன் முதுகும் செட்டைகளும், நீண்ட கொடிவாலும் செங்காவி நிறத்தில் இருந்தன. அப்போது அது பறந்தது. ஒய்யாரமாய் காற்றில் எழுந்து நீண்ட வால் புடவைத் தலைப்பென அசைந்தாட அது மிதந்து எழுந்து காற்றில் சுழன்று சட்டென ஒரு சிறு கிளையில் அமர்ந்தது. இயற்கையின் ஒரு சிறு நாடகம் நடிக்கப்பட்டது போல அது இருந்தது. அந்நாடகம் பறக்கும் சிறு பூச்சிகளைப் பிடிப்பதற்கான ஈப்பிடிப்பான்களின் துடிப்பான, பறத்தல்களை ஒத்திருந்ததை மனம் கண்டுகொண்டது. இதனிலும் விரைவான, துடிப்புடன் திசைமாற்றி சரிந்தெழுந்து பறக்கும் இரட்டைவால் குருவிகளின் பறப்பும், விரைந்தெழுந்து விர்ரென நீண்ட பாதையில் வளியில் பறந்து சட்டென திசைமாறி பறக்கும் பச்சைப் பஞ்சுருட்டான்களையும் அது நினைவுக்கு கொண்டுவந்தது. அது பூச்சிகளைப் பிடிக்கிறது. அதே கிராமத்தில் சற்று நேரத்தில் அதேபோன்ற இன்னொரு பறவையைக் கண்டேன். வியப்பூட்டும் விதத்தில் அதன் செட்டைகளும், மார்பும், நீண்ட கொடிவாலும் கூட வெள்ளிநிற வெண்மையைக் கொண்டிருந்தன. தலையும், கழுத்தும் கொண்டையும் கருப்பு நிறத்திலேயே இருந்தன. அதுவும் ஒரு ஈப்பிடிப்பான் என அறிந்தேன்.
பின்னார் கேரள மாநிலத்தில் பாலக்காட்டுக்கு அருகில் உள்ள ஒரு நண்பரின் வீட்டுக்குச் சென்றிருந்த போது மற்றொருமுறை இப்பறவையினைக்கண்டேன். மற்றொரு ஆச்சர்யமாக செங்காவி நிறச் செட்டைகளும், சிறியவாலுடன் இதே பறவையினைக்கண்ட போது அது இதன் குஞ்சாக இருக்கலாமோ என்றெண்ணினேன்.
சலீம் அலி ஆண்பறவைகள் இந்த செங்காவி நிற நீண்ட வாலைக் கொண்டிருக்கையில் இளம், வால்கொண்டலாத்திகள் பளபளக்கும் வெள்ளிநிற வெண்சிறகுகளையும் வாலையும் கொண்டிருக்கவும் செய்யும் என்கிறார். பெட்டைகளும், ஆண் வால்கொண்டலாத்திக் குஞ்சுகளும் நீண்ட வாலற்று காணப்படுமாம். நான் கேரளத்தில் கண்டது ஒரு பெட்டையாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். கும்பகோணத்திலேயே வெள்ளை மற்றும் செங்காவி வால்களுடன் கூடிய ஆண் பறவைகளைக் கண்டிருக்கிறேன். மேலும் சலீம் அலி குறிப்பிட்டது போல அதன் ஒய்யாரமான மிதந்தலைந்து ஈப்பிடிக்கும் காட்சி காணும் எவருக்கும் இன்பம் தருவதுதான்.
Comments