பொன்னான காற்று

சுந்தருக்கு:
பொன்னான காற்று எங்கும் வீசுகிறது. இலையுதிர்க் காலம். காற்றில் உதிர்ந்து கொண்டேயிருக்கின்றன. பொன்னான காற்று. பெரிய மரங்கள் கூட தமது இலையத்தனையும் உதிர்த்துவிட்டு ஏதோ தவம் போல, தண்டனைக்கான வருத்தம் போல வெற்றாய் நிற்கின்றன. அந்த இலைகளில் காற்று முகம் துடைத்துக்கொண்டது. அந்த இலைகளில் நிலவு கவிதைகளை பெய்து நிறைத்தது. பனியோடு கலந்து மரம் அதை குடித்துவிடுகிறது.
மரங்களும் இலைகளுலே காலங்காலமாய் உயிர்ப்பின் குறியீடாய் இருக்கின்றன. மலர்கள் மகிழ்வின் குறியீடாய் இருக்கலாம்.

மழைக்காலங்களில் இலைகளின் அழகைச் சொல்லிமுடியாது. ஒவ்வொரு துளியும் அதோடு உறவு கொள்கிறது. முற்றாக நனைந்து விளக்கொளியிலோ, நிலவிலோ அது தாழ்ந்துபோய் பளபளவென்று மின்னுகிறது. அப்போது உனக்கு என்ன நினைவுக்கு வருகிறது? மழை நின்றவுடனும், ஒவ்வொரு துளியாக வாங்கி மெல்லச் சொட்டுகிறதே, அப்போது ஒரு துடிப்பு, இசைவான ஒரு லயம். உறவின் உச்சம்.
அந்த இலைகள்தான் உதிர்கின்றன.
ஒவ்வொரு இலையும் தன்மீது மோதுகின்ற காற்றை சலித்து அனுப்புகிறது. காற்றின் ஏதோ ஒரு மோதலில் சட்டென ஒரு கணத்தில் அது நடக்கிறது. மெல்ல சுழன்று கொண்டோ, ஆடிக்கொண்டோ சைக்கிள் மேல், நிறுத்திக்கிடக்கிற காரின் மேல், நடந்துபோகிறவன் மேல் அல்லது நேரடியாகத் தரையில்.
கலகலவென்று பேசிய மரங்கள், திடிரென இப்போது ஓய்வாய் இருப்பதாய்ப் படுகிறது. ஒருமுறை நினைத்தேன், “இலைகள் தான் எப்போது பேசுகின்றன. கீழே விழுந்த விழுந்த பின்னும் அவை அதை நிறுத்துவதில்லை”.
எனக்கு மரங்கள் வேண்டும். பெரிய மரங்கள். சின்ன மரங்கள் எல்லாம். இலைகளுடன். இல்லாமல்.
இப்போதெல்லாம் வேரோடு ஈச்சை மரங்களை வைத்து ‘உடனடி மரங்களை’ இங்கு வளர்க்கிறார்கள். முட்டாள்கள். நான் ஈச்ச மரங்களுக்கு எதிரியில்லை. ஆனாலும் மரங்களை வரிசையாக வைப்பதே பாபம் தான். அது வன்முறையில்லையா? காற்று அப்புறம் எப்படி வளைந்து வளைந்து போகும்? பறவைகள் கூட சிரிக்கின்றன. சரி விடு.
கருப்பர் கோவிலைச் சுற்றி நிறைய மரங்களை வைத்திருக்கிறார்கள் இப்போது. ஊரில் எனக்கு மகிழ்வைத் தந்தது அது ஒன்றுதான்.
மரங்களின் ஊடே இருந்து ஒரு பறவை தாழப்பறந்து என்னை கடந்து சென்றது. என் வண்டியின் விளக்கொளியில் வெண்ணிற இறக்கைகளும், பளிங்குக் கண்களும் தோன்றி மறைந்தன.
(பழைய கடிதங்களில் (5.03.2000) ஒன்று.)

Comments