கடிதம் 2 - மீன் குஞ்சுகள் சொல்லும் கதைகள்

சுந்தருக்கு,
உனது கொட்டான்கள் நிரம்பி வழிகின்றனவா? நல்லது. வாழ்கின்ற எவனுக்கும் அப்படித்தான் நடக்கும். கிணற்றில் வாழ்கின்ற மீன்குஞ்சுகள் வாழ்க்கையென்பதை ஆழமும், சுற்றிவரத்தக்க எளிமையும் கொண்டதாக கிணற்றின் சுவர்களில் செதுக்கிவைக்கின்றன. ஆற்றில் வாழ்கின்ற மீன்குஞ்சுகளின் கதையோ வேறாய் இருக்கிறது. அவை வாழ்க்கை மாறிக்கொண்டே இருக்கிறதெனவும், அது தீர்மானமானதொரு வேகத்தோடும், திசையிலும் பயணிக்கிறதென்றும் படித்துறைகளிலும், ஆற்றில் வேரோடிய பெருமரங்களின் அடிமரங்களிலும் இரகசியமாய் எழுதிவைக்கின்றன. கடலில் காணுகின்ற காட்சி வேறானதாய் இருக்கிறது. ஒவ்வொரு மீன்கூட்டமும் ஒவ்வொரு கதையினை பவளப்பாறைகளிலும், ஆளற்ற மண் திட்டுகளிலும், எழுதிவைக்கின்றன. ஒரு திமிங்கிலம் தனது வாழ்க்கையைப் பற்றியப் பாடலை (whale song) இசைத்துக் கொண்டிருந்தது. அப்போது அதன் குட்டி அந்தப் பாட்டைத் திரும்பிப் பாடிவிட்டு அம்மாவிடம் ஒரு 50 லிட்டர் பாலைக் குடித்துவிட்டு ஓடியது….
(ஒரு பழைய கடிதம்)
படைப்புகள் படைப்பாளியின் அனுபவம் குறித்தே பெரும்பாலும் பேசுகின்றன. ஆனால் அனுபவங்களின் ஊடாக நம்மைக் கடந்து செல்லும் வாழ்க்கை குறித்து யாராவது எழுதுகிறார்களா? விளையாடுபவனாகவும், வேடிக்கை பார்ப்பவனாகவும் நான் எழுதலாம், ஆனால் வாழ்வெனும் அந்த மாபெரும் விளையாட்டை எப்படியாவது காட்டமுடிகிற திறன் வாய்க்குமா? அதைக் காணுகிற பொழுது காட்ட முயல்கிற விருப்பம் மறைந்துபோகும் என்கிறான் அவன். அல்லது வாழ்வை இப்படியும் எழுதலாம் (தாயுமானவர்).
“பாக்கின்ற மலரூடு நீயே இருத்தி, அப்பனிமலர் எடுக்க மனமும் நன்னேன்”

Comments