ஜெர்டன் பச்சைச் சிட்டு
இலையொன்று சட்டென்று ஒரு மரத்தில் இருந்து இன்னொரு மரத்துக்குப் பறந்து சென்றது. நான் இன்னொரு முறை அந்த இலை போய்ச் சேர்ந்த இடத்தைப் பார்த்தேன். அந்த இலை அங்கிருந்து துள்ளி இன்னொரு கிளையில் அமர்ந்தது. ஆ! அது இலையில்லை. இலையெனத் தோன்றிய ஒரு பறவை. வனத்தின் துளிபோல அது இருந்தது. ஆனால் அது மண் நோக்கி விழவில்லை. விண் நோக்கி மரங்கள் செலுத்துவதற்காக மரமொன்று எழுதிய கடிதம் போல இருந்தது. விண்ணின் முகவரி போல சின்ன நீல நிறத் தீற்றல் ஒன்று அலகின் அடிப்புறமாகக் காணப்பட்டது. பசும்பச்சையில் கண்ணாடிக் கோளமாக உருண்ட கண்களின் அடியில் நீலக் கடலொன்று அலையடித்தவாறிருந்தது. சிறிய பறவை அது. மைனாவை விடச் சிறியது. ஜெர்டன் பச்சைச்சிட்டு அல்லது இலைக்கிளி என்றறியப்படுகிறது. பெண்பறவையின் கழுத்தில் இன்னும் அற்புதமான பசும்நீலத் தீற்றல் காணப்பட்டது.
ஜெர்டன் பச்சைச் சிட்டு (ஆண்) |
***
இன்று கால்வினுக்குப் பிறந்தநாள் என்று இப்போதுதான் தெரியவந்தது. கால்வின் அருமையான சிறுவன். அவன் நிறைய வாசிக்கிறான். ஒரு குழந்தை, அவனுக்கு 12 வயதே ஆகட்டுமே, உங்கள் வீட்டின் படிப்பறையில் கால்களை மடக்கி நாற்காலியில் வைத்துக்கொண்டு புத்தகங்களுக்குள் மூழ்கிப்போய்விட்டதைக் காணும் போது நீங்கள் உன்னதமான ஒரு காட்சியைக் காணுகிறீர்கள். இந்தப்பறவை அப்படியொரு காட்சிதான். அதனால்தான் நான் இந்தப்படத்தை இன்று பதிப்பிக்கிறேன்.
கால்வின், வாசிப்பின் நீலம் படிந்த ஒரு பசும்பச்சைப் பறவை! வாழ்க கால்வின்!!
Comments