மழைக்குருவி

வடகிழக்கு பருவமழை இந்தமுறை தாமதமாகி விட்டதென நாளிதழ்களில் வாசித்துக்கொண்டிருக்கிறேன். சின்னவயதில் விவசாயிகள் மழையைப் பற்றி ஓரிரு வார்த்தைகளில் வானத்தைப் பார்த்தோ மண்ணைப் பார்த்தோ பேசிக்கொள்வார்கள். ஓரிரு  வார்த்தைகள்தான்! “பெய்வனாங்குதே” என்பார் ஒருவர். மற்றவர் உதடு பிதுக்குவார். அவ்வளவுதான். இன்னொருநாள் சாக்கு படுதா தொங்கும் டீக்கடையில் நடுங்கியபடி நுழையும் ஒருவர் “காத்து கொண்டு போய்டுச்சி” என்பார், கீற்றுக்கூரையில் இருந்து மழைநீர் விழுந்து குழிகளில் விளிம்பெழத் தெறித்துக்கொண்டிருப்பதைப் பார்த்துக்கொண்டிருப்பவர், “ஆமா” என்றபடி டீக்கிளாசை வைத்துவிட்டு துண்டைத் தலையில் போர்த்திக்கொண்டு, ஒருமுனையை பல்லால் சற்றே கடித்தவாறு மம்பட்டியை எடுத்துக்கொண்டு  வேகமாய் வயலுக்கோ, வீட்டுக்கோ விரைவார். நாம் இப்போது இங்கிலீஸ்கார்கள் மாதிரி மழையை பேப்பரில் படித்துக்கொண்டிருக்கிறோம். நான் மட்டும் அப்படிச் செய்யவில்லை. மொத்த ஊரே அப்படிப் படித்துக்கொண்டு இருக்கிற ஒரு நாளில்தான் நமது வீடுகளுக்குள் தண்ணீர் வந்தது. நமது புத்தக அலமாரிகள் நீரில் மிதந்தன. சாலைகளில் படகுகள் வந்தன.
சுடலைக் குயில்
 இன்று காலை ராக்-குக்கு உணவிட்டுக்கொண்டு நின்றபோது எதிரே இருந்த வேப்பமரத்துக்கு ஒரு பறவை பறந்து வந்து இலைச் சதுப்பில் புதைந்துபோனது. அதைத்தொடந்து வந்த மற்றொரு பறவை நான் காணுமாறு அதே மரத்தில் அமர்ந்தது. அவை சுடலைக்குயில் (Pied or Jacobin Cuckoo) எனப்படும் குயிலினத்தைச் சேர்ந்த பறவைகள். சென்ற வருடங்களிலும் மழைவருவதற்கு சில நாட்களுக்கு முன் இதை நான் பார்த்திருக்கிறேன். இந்த இணை இன்று வந்தஉடன் இது தோன்றி சூழலைக் கவனிக்கிறேன். மந்தாரமாகத்தான் இருக்கிறது. வீட்டுக்குள் நுழையும்போது பக்கத்துவீட்டு தொலைக்காட்சி சில ஊர்களில் மழை பெய்திருப்பதைச் சொல்லிக்கொண்டிருக்கிறது. திருச்சிக்கும் இன்று மழை வருமோ?
IMG_1576c-PS-wL

இதை முடிக்கிற பொழுதில் மின்சாரம் போய்விட்டது. திரும்பிப் பார்த்தேன் முற்றத்தில் மழை!

முந்தைய பதிவுகள்:

Comments

Chandra said…
Thank you for sharing