தினை தாள் அன்ன சிறு பசுங் கால்

மஞ்சள் குருகு (Yellow Bittern) தமிழ்நாட்டில் காணுவதற்கு ஒரு அரிதான பறவை என்று eBird பட்டியல் சொல்கிறது. Oxford Birds of the Indian Subcontinent (Helm Field Guides) லும் மஞ்சள் குருகு தமிழ்நாட்டில் தனிப்பட்ட சில இடங்களில் காணப்பட்ட குறிப்பே கிடைக்கிறது. க. ரத்தினத்தின் ‘தமிழ்நாட்டுப்பறவைகள்’ நூலில் செங்குருகு, கருங்குருகு பற்றிய தகவல்கள் காணக்கிடைக்கிறது. மிகவும் அச்சப்படும், புதர்களில் நாள்முழுவதும் மறைந்திருக்கும் சுபாவம் கொண்டதாக குறிப்பிடப்படுகிறது. ஆனால் சங்க இலக்கியங்களில் வெண்குருகு என்று மஞ்சள் குருகு குறிப்பிடப்படுகிறது. செங்குருகு பற்றிய எனது முந்தைய பதிவில் காவிரியில் எடுக்கப்பட்ட படம் உள்ளது. அதில் நான் அற்புதமான கவிதை என்று எண்ணும் குறுந்தொகைப்பாடல் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. அது போன்ற ஒரு பாடல் போதும் ஒரு மொழியின் கவிதை விளைச்சல் எத்தன்மையது என்று சொல்ல.




மறுபடியும் இன்னொரு மஞ்சள் குருகை நான் கிளியூர் குளத்தின் புதர்ச்செறிவில் மறைந்திருந்து கண்டேன். நான் இருப்பதை அது அறியாமல் இருக்குமாறு நான் முட்புதரொன்றில் இருந்தேன். அது அப்போதும் சந்தேகத்தோடு உறைந்து போனதுபோல நின்றது. மெல்ல கழுத்தை மட்டும் நீட்டியது. ’தினை தாள் அன்ன சிறு பசுங் கால்’ என்று கபிலர் குறிப்பிட்ட அதே பசுங்கால். அதே போன்ற, இரகசியமான, மனிதர்கள் அண்டுவதற்கரிய நீர்நிலையை ஒட்டிய புதரின் அருகில்.  இந்தக்குருகு யார்க்கெல்லாம் சாட்சியாக நின்றதோ! அதே குளத்தில் மற்றொரு புதரில் இன்னொரு குருகு, சட்டெனப்பறந்து பூக்கள் அழகுசெய்த இன்னொரு புதரின் மறைவில் நின்றது. பறக்கும் போது கண்ணுற்ற அதன் சிறகின் வண்ணங்கள் அதை உறுதிசெய்துகொள்ள உதவின. குறைந்தது 3 மஞ்சள் குருகளாவது கிளியூர் குளத்தில் இருக்கலாம்.

Comments

Popular Posts