கருகிய நினைவுகள்

அங்கு சில திருகுக்கள்ளி மரங்கள் இருந்தன. அவைகள் எல்லாம் எரியூட்டி அழிக்கப்பட்டன போல பச்சையழிந்து கரி படிந்து கருகியும் கருகாமலும் நின்றன. சூழ நின்ற குறுமரங்கள் அனேகமாக எரிந்தழிந்திருந்தன. கருவேல மரங்களை வேரொடு கெல்லி எரித்தழிக்கும் முயற்சியில் சற்று தள்ளி நின்றிருந்த இந்தக் கள்ளிமரங்களும் அழிந்துபோயின போலும். ஏனோ அது வெறும் கள்ளி மரங்கள் எரிக்கப்பட்டதாய் தோன்றாமல் ஒரு அழிவின் குறியீடாய்த் தோன்றியது. அதையே சுற்றி சுற்றி வந்துகொண்டிருந்தேன். அப்போது அந்தப் பறவைகளைக் கவனித்தேன். கருஞ்சிட்டுகள் (Indian Robins). ஆணும் பெட்டையும் அந்தக் கருகிய மரங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும் அமர்வதும், உள் நுழைந்து பார்ப்பதும், கத்துவதுமாக இருந்தன. அவைகளின் போக்கு அந்த மரத்தொகுதியை ஆராய வந்தது போலத்தோன்றவில்லை. அவைகள் அந்தப் பகுதியில் வசித்திருக்கவேண்டும். அவைகளின் கூடு எதுவும் அங்கிருந்ததா? அதன் குஞ்சுகள் அழிந்தனவா என்று தெரியவில்லை. ஆனால் அவைகள் அந்த கருகிய மரங்களின் சில அடர்ந்த பகுதிகளில் நுழைந்து பறந்தும் சுற்றியும் வந்தன. பொதுவாக பசுமையும், நீர்மையும் கொண்ட பின்னணியில் பறவைகளைக் கண்டுள்ளேன். கரிந்த கள்ளியில் கருஞ்சிட்டுகள் போரழிவின், இனப்படுகொலையின் நினைவுகளை ஏனோ கொண்டுவந்தன.


Comments