கிளியூர்க் குளமும் நீர்ப்பறவைகளும்
கிளியூர் திருவெறும்பூரில் (திருச்சி) இருந்து 20 கிமீக்குள்தான் இருக்கும். வெண்ணாற்றங் கரையில் கல்லணைக் கால்வாயை ஒட்டியவாறு கிளியூர் இருக்கிறது. கூத்தப்பார் கிராமத்தின் வழியாக பேருந்து செல்கிறது. கிளியூரின் தெற்கே வயல்களுக்கு மேற்காக இருப்பது கிளியூர்க் குளம். கிளியூரில் பெயருக்கு ஏற்றாற்போல கிளிகள் இருக்கின்றன. இந்த மழைக்காலத்தொடக்கத்தில் அக்குளத்தில் நீர் இருக்கிறது. குளத்தின் கீழ்கரையாக, வயல்களைப் பிரிக்கும் வகையில் கிளியூருக்குச் செல்லும் சாலை இருக்கிறது. இந்தச்சாலையில் இருந்து குளத்தை மறைக்கும் வகையில் சீமைக்கருவேல மரங்கள் இருக்கின்றன. ‘ப’ வடிவில் இருக்கிறது குளம். நான் போனபோது குளத்தில் நிறைய பறவைகள் இருந்தன. ‘ஓ’வென ஒரு ஒலி அடங்கி ஒலித்தவாறிருந்தது. அது பறவைகளின் ஒலி என்பதை பிறகே அறிந்தேன்.
கிளியூர் குளம் - பின்னால் நீர்க்காகங்களின் தலைகள், முன்னால் வாத்துக்கள் |
1. Little Cormorant (சிறிய நீர்க்காகம்)
2. Little Grebe (முக்குளிப்பான்)
3. Grate Cormorant (பெரிய நீர்க்காகம்)
4. Darter (பாம்புத்தாரா)
5. Little Egrets (சின்னக்கொக்கு)
6. Grey Heron (சாம்பல் கொக்கு)
7. Large Egret (பெரிய கொக்கு)
8. Cattle Egret (உண்ணி கொக்கு)
9. Indian Pond Heron (குருட்டுக்கொக்கு)
10. Bitterns (குருகுகள்)
11. Painted Stork (மஞ்சள் மூக்கு நாரை, சங்குவளை நாரை)
12. Asian openbill (நத்தை குத்தி நாரை)
13. Black Ibis (கருப்பு அரிவாள் மூக்கன்)
14. Spot-billed Duck (புள்ளிமூக்கு வாத்து)
15. Whiskered Tern (மீசை ஆலா)
16. Phesant-tailed Jacana (நீளவால் இலைக்கோழி)
17. Northern Shoveller (ஆண்டி வாத்து) female
18. Garganey (நீலச்சிறகி)
19. Common Teal (கிளுவை)
20. Common Coot (நாமக்கோழி)
நாமக்கோழி |
ஆண்டி வாத்து-குளிர்கால வலசைப்பறவை |
கருப்பு அரிவாள் மூக்கன் அல்லது அன்றில்-இளம் பறவை |
சிறிய நீர்க்காகங்கள் |
வாத்துக்கள் கூட்டம்-நீலச்சிறகி, புள்ளிமூக்கு வாத்து, ஆண்டி வாத்து, கிளுவை |
வாத்துக்கள் கூட்டம்-நீலச்சிறகி, புள்ளிமூக்கு வாத்து, ஆண்டி வாத்து, கிளுவை |
மீசை ஆலா-குளிர்கால வலசைப் பறவை |
மீசை ஆலா |
முக்குளிப்பான் |
சிறிய நீர்க்காகமும் பாம்புத்தாராவும் |
நீளவால் இலைக்கோழி |
வேட்டை ஆரம்பம்..நீர்க்காகங்களின் ஒருங்கிணைந்த மீன்வேட்டை |
நீர்க்காகங்களின் ஒருங்கிணைந்த மீன்வேட்டையைப் பயன்படுத்திக்கொள்ளும் மீசை ஆலாக்கள் |
நீர்க்காகங்களின் ஒருங்கிணைந்த மீன்வேட்டையைப்பயன்படுத்திக்கொள்ளும் மீசை ஆலாக்கள் |
இன்னும் சில இருக்கலாம். நிச்சயம் இருக்கும். ஆண்டி வாத்தும், நீலச்சிறகியும், கிளுவை கலந்து ஒரே வாத்துக்கடலென நீரில் மிதந்தலைந்துகொண்டிருந்தன. அவற்றினிடையே மணிமிடைப் பவளம் போல புள்ளி மூக்கு வாத்துகள் சில இருந்தன. பொதுவாக நாரைகள் மரங்களின் மேல் இருந்து சட்டென விண்ணையளப்பன போல வெடித்துப்பறந்தன. குருட்டுக்கொக்கு கரையோரங்களில் அசையாது நின்றிருந்தது; அருகில் போனபின் தாவிப்பறந்தது. சிறிய நீர்க்காகங்கள் ஒரு நகரும் படையணியென ஒற்றை பேருடலாக மீன்களை வளைத்து ஒதுக்கி வேட்டையாட முனைந்து நகர்ந்துகொண்டே இருந்தன. அவைகளுக்கு மேலே போர் ஒத்திகைகளின் போது பறந்தவாறு வரும் விமானங்களைப்போல மீசைஆலாக்கள் பறந்தும் நீரினுள் பாய்ந்தும் வந்துகொண்டிருந்தன. கூத்தப்பார் பெரியகுளத்தில் பார்த்தது போல ஒரு நீர்க்காகங்களின் ஒருங்கிணைந்த மீன்வேட்டையை இங்கும் கண்டேன். அதைவிட பெரிய எண்ணிக்கையில் நீர்க்காகங்கள் குளத்தின் ஒரு சாரியில் இருந்து அலையெனக்கிளம்பி மெல்ல வந்துகொண்டே இருந்தன. தெற்கும் வடக்குமாக மடங்கி மடங்கி பறந்துகொண்டிருந்த ஆலாக்கள் திடீரென உற்சாகம் கொண்டு ஒரேபக்கமாகத் திரண்டு நீர்க்காகங்களின் படையணிக்கு மேலாகப் பறக்கத்துவங்கின.
நீர்க்காங்களின் ஒருங்கிணைந்த மிகப்பெரிய மீன்வேட்டையை ஆலாக்கள் தங்களுக்கும் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளூம் காட்சியை அன்று கண்டேன். அதுவும் என் கண்முன்னால். சுற்றிவளைக்கப்பட்ட மீன்களை நீர்க்காகங்கள் மூழ்கிப் பிடித்து தலைதூக்கின. ஆலாக்கள் தண்ணீருள் பாய்ந்து பாய்ந்து மீன்களை பற்றிக்கொண்டு மீண்டும் பறந்தன. சின்னஞ்சிறு வெள்ளித்துணுக்குகள் போல மீன்கள் ஆலாக்களிடமும், நீர்க்காகங்களிடமும். ஆலாக்கள் எப்போதும் ஓயாது பறந்து திரிபவை. உட்கார்ந்திருக்கும் ஒரு ஆலாவையும் நான் இதுவரை பார்த்ததில்லை. கடற்கரை ஓரங்களில் அவைகள் உட்கார்ந்திருக்கலாம். ஏரிகள், ஆறுகளில் சுற்றும் ஆலாக்கள் எப்போதும் பறந்தவாறே, அதுவும் அந்த ஒரு பகுதியிலேயே முன்னும் பின்னுமாய் பறந்துகொண்டிருக்கும். தமிழில் ‘ஆலாய்ப் பறக்கிறான்’ என்றொரு சொலவடை உண்டு. அமைதியற்று எந்நேரமும் வேலையை முன்னிட்டு அலைபவனைக் குறிப்பிட இப்படிச் சொல்வதுண்டு. இன்று அந்தச் சொலவடை மேலும் துலக்கம் பெற்றது. காரியமாய் அலைவது மட்டுமல்லாமல் சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளும் திறனையும் பெற்றிருத்தலையும் அது குறிக்குமோ!
Comments