உருவாய் அருவாய், உளதாய் இலதாய்...

நேற்று சித்திரை முதல் நாள். காலையில் பையனைப் பள்ளியில் கால்பந்து முகாமுக்கு அனுப்பிவிட்டு பக்கத்தில் ஓடிக்கொண்டிருக்கும் உய்யங்கொண்டான் வாய்காலின் கிளைவாய்காலின் கலிங்கு ஒன்று இருப்பதால் அங்கு பறவைகள் இருக்கக்கூடுமென்று எண்ணி அங்கு சென்றேன். கலிங்கின் இரு கரைகளிலும் இரு பெரிய அரசமரங்கள் இருக்கும். காலை நேரம் பல பறவைகளின் இருப்பும் ஒலியும் அந்த இடத்தை நிறைத்தவாறிருந்தது.  கதிரவனொளி இளம்பச்சை அரச இலைகளைகளையும் கொடிகளையும் புதுக்கிக்கொண்டிருந்தது. எல்லா உயிரும் களிகொண்டிருந்ததாகத் தோன்றியது. பல்லாயிரம் ஒளிக்கால்கள் கொண்டு எழும் புரவி ஒரு வேப்பம்பூவையும் உதிர்க்காமல் மேலேறித்தாவுகிறது.


மஞ்சனத்தி பூ

சிறு பறவைகள், சிட்டுகள், சின்னான்கள், வால்காக்கைகள், கரிச்சான்கள், ஈப்பிடிப்பான்கள், காகங்கள், மைனாக்கள் என்று பல பறவைகள் அரசமரத்தின் கிளைகளின்மீது தாவித்தாவிப் பறந்தலைந்தன. கலிங்கில் நீர் நிறைந்திருக்க அதில் மீன்கள் துள்ளிக்கொண்டிருந்தன. மிகச்சிறிதாக நீர் திறந்துவிடப்பட்டிருந்தது. 

செங்குதச் சின்னான்

மீன்கொத்தி

அரசவால் ஈப்பிடிப்பான்

அரசவால் ஈப்பிடிப்பான்

செங்குதச் சின்னான்

கீச்சான்
தையற் சிட்டு

வால்காக்கை
வல்லூறு

பருந்து


கலிங்கின் மேற்குச் சுவரை ஒட்டி எழுந்த அரசமரத்தின் வேர்கள் சுவரை ஊடுருவிச் சென்றிருந்தன. அதனடியில் வேலொன்று நின்றது. அதை ஒருவர் நீண்ட நேரம் வணங்கிச் சென்றார். 




இந்தப்படத்தை பையன் பார்த்துவிட்டு அவ்வையின் பாடலை நினைவு கூர்ந்தான். இந்த வருடம்தான் படித்திருந்ததனால் சரியாக நினைவில் இருந்து ஒப்பிக்க முடிந்தது.

வெட்டனவை மெத்தனவை வெல்லாவாம், வேழத்தில்
பட்டு உருவும் கோல் பஞ்சில் பாயாது, நெட்டு இருப்புப்
பாரைக்கு நெக்கு விடாப் பாறை பசுமரத்தின்
வேருக்கு நெக்கு விடும்                                                                  (நல்வழி பாடல் 33)

இந்த கற்களைப் பிளந்து ஊடுறுவுகிற வேரும் பக்கத்தில் ஊன்றப்பட்ட வேலும் வழிபடுபவருக்கு தருவதும் பையனுக்குத் தருபதும் வேறு வேறு அனுபவங்கள் என்று தோன்றும் போதே, பண்பாடு என்பதே பல சிக்கலான அனுபவ ஊடுபாவுகளால் உருவாகும் போதம் என்பதும் தோன்றுகிறது. எப்படியும் ஒளியால் ஆனது வாழ்வு!


Comments

Popular Posts