எனக்கு இன்னொரு பேர் இருக்கு...முத்து!

 Brown-breasted Flycatcher (Muscicapa muttui)
இரண்டாண்டுகளுக்கு முன்பு இந்தப் பறவையை நான் கேரளத்தின் கொலப்புளி என்ற ஊரில் படம் பிடித்தேன். இது என்ன பறவை என்று அப்போது எனக்குத் தெரியாது. சிட்டுக்குருவியை விட சற்றே பெரிதாக இருந்தது என்றுதான் நினைக்கிறேன். எனக்கு ஞாபகமறதி அதிகம். சற்று தொலைவில் தான் இருந்திருக்க வேண்டும். இரண்டு புகைப்படங்களே எடுத்திருந்தேன். என்னுடைய கணக்கில் அது குறைவானதுதான். நான் குறைந்தது ஒரு பறவையை பத்து அல்லது அதற்கும் மேற்பட்ட முறை படம் எடுப்பேன், அதற்குள் அது பறந்துவிடாமல் இருந்தால். பிறகுதான் சற்றே விலகி வேறொரு கோணத்தில், அந்தப் பறவையின் சிறப்புத்தன்மை அல்லது தனித்தன்மை, கண்கள்,  பறவையின் பின் புலம் இவைகளைக் குறித்து கவனம் செலுத்த ஆரம்பிப்பேன். அந்த முறை அதையெல்லாம் செய்வதற்கு முன் என் கவனம் அங்கே என் நண்பரின் வீட்டில் நடந்த சிறு விளையாட்டில் ஈடுபட்டுவிட்டது. இச்சிறுபறவை பறந்துவிட்டது. அது எனக்களித்திருந்த சிறு பொழுது இப்படி சட்டென்று முடிந்துவிட்டது. காலம் பறவை பறந்து போன கிளையில் பனிபோல இருந்தது. அலாஸ்காவில் அப்படி பனி மரக்கிளைகளில் சலனமற்று இருக்கும். உண்மையில் பனி பலமாதங்கள் அப்படியே இருக்கும். ஆனால் இங்கு காலம் அப்படி இருந்தது. பறவை அந்தக் காலத்தை அழித்த ஒரு பெருவெடிப்பு போல. இப்போது அந்த மெல்லிய கிளையில் காலம்தான் யுகாந்திரமாக இருப்பது போல இருந்தது

நான் புகைப்படக் கருவியில் இந்தப்பறவை இருக்கிறதா என்று பார்த்தேன். இருந்தது. ஆனால் தெளிவாக இருந்தது என்று சொல்லுமளவுக்கு இருக்கவில்லை போல. ஏனெனில் நான் உடனே வேறொரு கிளையை, மரச்செறிவைத் தேட ஆரம்பித்தேன். காதுகளை கூர்மையாக்கி இன்னொரு பெருவெடிப்பு ஒன்று நிகழுமா என்று தேடினேன்.

பிறகு வீட்டுக்கு வந்த பிறகு அந்த இரண்டு படங்களும் அவ்வளவு கவரும் விதமாக இல்லை என்று நினைத்தேனோ அல்லது இன்னும் தெளிவாக எடுத்திருக்கலாம் என்று நினைத்தேனோ, ஏதோ ஒன்று. நான் எனக்குக் கிடைத்த வெகு சொற்பமான நேரத்தில் அந்த இரண்டு படங்களையும் தேடித் தீட்டிக் கொண்டுவர முயலவில்லை. பலமாதங்கள் கழித்து வேறொரு படத்துக்காக இந்த படங்களைப் பார்த்த போது இந்தப் பறவை என்னை உறுத்துப்பார்த்தது. அதற்கு உருண்டையான பெரிய கண் வேறுஇது ஏதோ ஒரு குருவி என்று கடந்து போக முடியாத அளவுக்கு என்னை பிடித்து நிறுத்துகிறது. நாம் அப்படித்தானே போகிறோம்

அன்றொருநாள் செய்திதாளில் ஒரு சிறுவனைப் பற்றிய சிறப்புச் செய்தியொன்று வந்திருந்தது.  4 வயதோ 5 வயதோ ஆன அந்தப்பாலகன் எந்த நாட்டுக் கொடியைக் காட்டினாலும் நாட்டின் பெயரைச் சொல்லிவிடுகிறான்.  எல்லா சமயத்திலும் சரியாக.  ஐக்கிய நாடுகள் சபையில்193 நாடுகள் இருக்கின்றன. இன்னொரு சிறுவன் என்னை இன்னும் அதிகமாக மிரட்டினான். அவன் எந்த காரைக் கண்டாலும், அது எந்த நிறத்தில் இருந்தாலும் அதன் மாடலையும், கம்பெனியின் பெயரையும் சரியாகச் சொல்லிவிடுகிறானாம். கார்களின் மாடல்களின் எண்ணிக்கை நாடுகளின் எண்ணிக்கையினைக் காட்டிலும் பலமடங்கு அதிகம் என்ற தகவலை மட்டும் நான் இணையத்தின் மூலம் உறுதியாகத் தெரிந்துகொண்டேன். இவர்களை எல்லாம் விட என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய ஒரு பையனை சமீபத்தில் சந்தித்தேன். அவனுக்கு15 வயது இருக்கும். இந்தப் பையன் அங்கு வந்த பறவைகள் எல்லாவற்றையும் குருவி என்ற ஒரு பெயராலேயே அழைத்தார். அங்கு10க்கும் மேற்பட்ட பறவைகள் இருந்தன.   ஒருவேளை அங்கு கோழி ஒன்று இருந்திருந்தால் அதை சிக்கன் என்று அவர் சரியாகச் சொல்லியிருக்கக்கூடும் அங்கு காக்கையும், மயிலும் இல்லை. அவர் அவற்றின் பெயரைச் சரியாகச் சொல்லக்கூடும் என்ற நம்பிக்கையோடுதான் இருக்கிறேன். என்றாலும், இந்தியாவில் மட்டும்1300க்கும் மேலான பறவையினங்கள் இருக்கின்றன என்ற தகவல் என்னை அயர்ச்சியடையவே செய்கிறது.

இந்தப் படத்தில் இருக்கும் பறவையையும் ஒரு குருவி என்று தாண்டிச் செல்லமுடியாத அளவுக்கு அது தெளிவான சில அடையாளங்களோடு இந்தப் படத்தில் பதிவாகி இருந்ததால், இது என்ன பறவையாக இருக்கும் என்று திடிரென என்னையே கேட்டுக்கொண்டேன்

அதன் அலகு நிச்சயம் தானியங்களைத் தின்கிற குருவிகளுடையதல்ல. தேன் உண்ணும் சிட்டின் அலகுமல்ல. பூச்சிகளை பிடித்துத் தின்னும் பறவைகளின் அலகை ஒத்ததாகத் தான் தோன்றியது. ஏதேனும் ஈப்பிடிப்பானாக இருக்கலாம் என்று நினைத்தேன். அலகின் அடிபுறத்தில் இருக்கும் மயிர் போன்ற அமைப்பும் கூட ஈப்பிடிப்பான்களை ஒத்ததாக இருந்தது. ஈப்பிடிப்பான்களின் படங்களையும் தேடினேன். ஆசிய பழுப்பு ஈப்பிடிப்பானாக இருக்குமோ என்றுதான் நினைத்தேன். இந்தப்பறவையின் கழுத்தோ, மார்போ, வயிறோ படத்தில் இல்லை. நன்றாகத் தெரிவதெல்லாம் செம்பழுப்பு நிற உடற் மேற்பாகங்களும் அழகான கண்ணும்தான். விக்கிபீடியா ஆசிய பழுப்பு ஈப்பிடிப்பானின் உடல் மேற்பாகம் சாம்பற் பழுப்பு என்றது. படங்களிலும் அப்படித்தான் தெரிந்தது. இந்தப்பறவையின் ஆலிவ் பழுப்பு நிற உடல் மேற்பாகமும், சாம்பற் பழுப்பு நிறத்தில் இருந்து வேறுபட்டிருந்தது. இரத்தினத்தின்தமிழ்நாட்டுப் பறவைகள்பார்க்கும் போது இது பழுப்பு மார்பு ஈப்பிடிப்பானாக இருக்கலாமோ என்று தோன்றியது. சலீம் அலியும் விக்கிபீடியாவும்  பழுப்பு மார்பு ஈப்பிடிப்பானின் செட்டைகளின் விளிம்பும்(edges of the flight feathers), தோகையடியை மறைக்கும் சிறகுகளும்(tail coverts)  செங்காவி (rufous) நிறமாக இருக்கும் குறிப்பிட்டார்கள். இவையே இதை ஆசிய பழுப்பு ஈப்பிடிப்பானிடமிருந்து தெளிவாக வேறுபடுத்திக் காட்டும் என்று குறிப்பிட்டிருந்தது இதை அடையாளம் காண உதவியது. இறுதியாக என்னை ஒயிலாகத் திரும்பிப்பார்த்த அலகின் அடிப்பகுதியும், கால்களும் வெளுத்த தசையின் நிறத்தில் இருந்தது இது பழுப்பு மார்பு ஈப்பிடிப்பான் தான் என்பதை உறுதி செய்தது. ஆசிய பழுப்பு ஈப்பிடிப்பானின் கால்களும் பாதங்களும் கறுமை நிறத்தில் இருந்தன.

இந்த  பழுப்பு மார்பு ஈப்பிடிப்பான்கள் வடகிழக்கு இந்தியாவிலும் மத்திய, தென் சீனத்திலும், வடக்கு பர்மாவிலும் தாய்லாந்திலும் இனப்பெருக்கம் செய்கின்றனவாம். தென்னிந்தியாவுக்கு குறிப்பாக கேரளம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளுக்கும் இலங்கைக்கும் வலசை வருகின்றன. இதன் வயிறு ஒரு கருந்திராட்சையின் அளவுக்கு இருக்குமா? நிச்சயம் நன்கு தேறிய அரை நெல்லிக்காயைவிட பெரிதாய் இருக்காது. அதை நிரப்பும் இதன் உணவு குறைந்த பட்சம் வடகிழக்கு மாநிலமொன்றில் இருந்து இலங்கைவரை விசிறியடிக்கப் பட்டுள்ளது. இது பிடிக்கும் பூச்சிகளில் இதன் பெயர் எழுதப்பட்டிருக்குமா? நம் பெயர் எழுதப்பட்ட ஆஸ்த்திரேலிய ஆப்பிள்கள், அமெரிக்க பேரிக்காய்கள், ஈரானிய பேரீச்சைகள் எண்ணையை எரித்துக்கொண்டு கண்டங்களைத் தாண்டி நம் தட்டில் வந்து விழவில்லையா? ஒரு ஆப்பிள் என்பது அப்பொழுது குடித்த ஆற்றல் எவ்வளவு என்பதை கணக்கிட நம்மிடம் சமன்பாடுகள் இருக்கின்றன. அந்த இரண்டாய் வகிர்ந்து இருக்கும் செங்காவி விளிம்புகொண்ட செட்டைகள் அடித்து அடித்து பறந்த வானத்தின் தொலைவையும், அதன் வயிற்றின் குறுக்களவையும் பொருத்தும் சமன்பாடு ஒன்று எந்தக் கணிதத்தில் இருக்கும்? அதன் கார்பன் அடிச்சுவடு(Carbon footprint) எவ்வளவு? நமது பாதங்களைப் போல அல்லாமல் மிக உறுதியாய்ப் பற்றியிருக்கின்றன அதன் கால்கள் ஆனால் அதன் செட்டைகள் தான் உண்மையான அதிகாரம் கொண்டவை என்று நினைக்கிறேன். அவைகள் எந்த அடிச்சுவடையும் காலத்திலோ, கார்பனிலோ விட்டுச் செல்லுமா என்ன!

ஆங்கில இயற்கையியலாளர் எட்கர் லீஓபோட் லேயார்டு (Edgar Leopold Layard). இவர் 1800 களின் முற்பாதியில் இலங்கையில்10 வருடங்கள் இருந்தபோது இராபர்ட் டெம்ப்ளீட்டனுடன் இலங்கையின் பறவையினங்களை ஆராய்ந்தார். அப்போது தன்னிடம் இந்தப்பறவையைக் கொண்டுவந்து காட்டிய தன்னுடைய முத்து என்கிற தமிழ்ச் சமையற்காரரின் பெயரால் இதற்கு Muscicapa muttui என்ற பெயரை வைத்தார்.

கழுத்தைச் சற்றே திருப்பி அது விசாரிக்கும் தோரணையை இப்போது மறுபடியும் பார்க்கும் போது நினைக்கிறேன். யாரேனும் அப்போது முத்து என்று அழைத்திருப்பார்களோ


Comments