கொசு உள்ளான்
![]() |
கொசு உள்ளான், Calidris minuta |
இந்தப்பறவையை நான் கோடியக்கரையில் சென்ற ஆண்டு நவம்பரில் படமெடுத்தேன். பழைய சோவியத் யூனியனில் (கஸக்ஸ்த்தான்) அல்மா-அடா பகுதியில் 9.8.1977 வளையமிடப்பட்ட ஒரு கொசு உள்ளான் கோடியக்கரையில் 13 வருடங்கள் 16 நாட்களுக்குப் பிறகு 25.8.1990இல் பிடிக்கப்பட்டது என்று சலீம் அலி குறிப்பிடுகிறார். சரியாக 6000 கிமீ கடந்து வந்திருக்கிறது. கசக்ஸ்தானிலிருந்து துர்க்மெனிஸ்த்தான், ஆப்கானிஸ்த்தான், பாகிஸ்த்தான் வழியாக வரச்சொல்கிறது கூகுள். நடுவில் சுங்கச்சாவடிகள் இருப்பதை மறக்காமல் தெரிவிக்கிறது. இந்த உள்ளானும் ஒரு வேளை கஸக்கஸ்த்தானில் இருந்து வந்திருக்கலாம்; அல்லது இன்னும் வடக்கே ஆர்டிக் பகுதியில் இருந்து வந்திருக்கலாம்.
தாவியும் லாகவமாகப் பறந்து திரும்பியும் கரையோர பூச்சிகளை கூட்டம் கூட்டமாக மேய்கின்றன இந்த உள்ளான்கள். ஆயிரக்கணக்கில் விண்னேறி காற்றில் கடுகி விரையும்போதும், சட்டென வளைந்து திரும்பி எதிர்திசையில் ஏறிச்செல்லும் போதும் அவைகள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்வதோ, ஒன்று வழித்தப்பி சிதறி வெளியேறுவதோ கிடையாது. எவ்வளவு நேர்த்தியான ஒத்திசைவு?
Comments