Search This Blog
Notes and photographs on life and art | கானுயிர்கள், வாழ்க்கை, கலை குறித்த புகைப்படங்களும் பதிவுகளும்
- Get link
- X
- Other Apps
Popular Posts
Mighty migratory birds and a local crow: A drama in Kiliyur tank
- Get link
- X
- Other Apps
Notes and photographs on life and art | கானுயிர்கள், வாழ்க்கை, கலை குறித்த புகைப்படங்களும் பதிவுகளும்
Comments
கொடுப்பினை இல்லை
எங்கள் விட்டிற்கு சென்ற ஆண்டு தினமும் ஒரு விருந்தினர் வந்து கொண்டிருந்தார். தினமும் வருபவரை விருந்தினர் என்று எப்படி அழைக்கலாம் என்கிறிர்களா? வருபவர் உங்களுக்குப் பிடித்தவராக இருந்து, அவர் வரவை ஆவலுடன் நீங்கள் எதிர் பார்ப்பதாக இருந்தால் அவரை விருந்தினர் என்று அழைப்பதில் தவறு ஒன்றும் இல்லையே.
வருகையை அறிவிக்க அவர் எங்கள் வீட்டுக் கதவைத் தட்டுவதோ அல்லது அதில் உள்ள அழைப்பு மணியை இயக்கிடும் ஸ்விட்சைத் தட்டுவதோ இல்லை. பதிலாக உரக்கத் தன் குரலில், “போங்க்… போங்க்… போங்க்” என்று அழைப்பார் என்னை. நானும் உடனே வாசல் கதவினைத் திறந்து கொண்டு அவர் தோட்டத்தில் தரையில் ஒய்யார நடை போட்டு அவ்வப்போது குனிந்து எதோ ஒரு பொருளைக் கொத்தித் தின்பதைப் பார்த்து ரசிப்பேன்.
அவர் உடல் நிறம் கறுப்புதான். அந்தக் கறுப்பு நிறத்திற்கும் அழகு சேர்த்திடும் அவரது மின்னும் கறும் பச்சை நிறக் கழுத்தும், செங்கற் சிவப்பு இறக்கைகளும், ரத்தச் சிவப்பு கண்களும்.
இந்தப் பறவையின் ஆங்கிலப் பெயர் க்ரோ ஃபெஸன்ட் (Crow pheasant) அல்லது க்ரேடர் கௌகால் (Greater Coucal) என்பதாகும். ஸென்ற்றோபஸ் சைனென்ஸிஸ் (Centropus sinensis) என்பது விஞ்ஞான ரீதியாய் இதற்கு அளிக்கப் பட்ட பெயர். தமிழில் இந்தப் பறவையினை செம்போத்துக் குருவி என்று அழைப்பார்கள்.
எங்கள் விட்டிற்குப் பக்கத்தில் ஒரு காலி மனை. அதில் புல் பூண்டுகளும், செடிகளும், மரங்களும் ஒரு குட்டிக் காடு போல் வளர்ந்திருந்தன. அதற்கு அடுத்த வீடு ஏழெட்டு வருஷங்களாகப் பூட்டி இருக்கும் ஒன்று. அங்கும் காடென வளர்ந்திருந்தன மரம், செடி, கொடிகள்.
இந்த இரண்டு இடங்களில் தான் எங்கள் விருந்தினர் வசித்து வந்தார் தன் கணவரோடு. ஆறு மாதங்களுக்கு முன்பு காடாய் வளர்ந்திருந்தவற்றை முனிசிபாலிடி காரர்களும் காலி வீட்டின் சொந்தக் காரர்களுமாக அகற்றினர். அத்துடன் செம்போத்து தம்பதியினருக்கு மறைவாய் வாழ்ந்திட இருந்த இடம் மறைந்தது.
செம்போத்து கூடு அமைப்பது வினோதமாக இருக்கும். சணல் கயிறு, துண்டுகள், வாழை நார், துணிக் கந்தல்கள், மெல்லிய குச்சிகள் இவற்றைக் கொண்டு ஒரு கால் பந்தளவிற்கு உருண்டையான கூட்டினை அமைக்கும்.
இப்படிப் பட்ட ஒரு வீட்டை எங்கள் வீட்டு எலுமிச்சை மரத்தில் அண்மையில் கட்டியது செம்போத்து. ஆனால் பாவம். கட்டிய அந்த வீட்டில் வாழ்ந்து குழந்தை குட்டிகள் பெற்றிடக் கொடுப்பினை இல்லை அதற்கு. காரணங்கள் இரண்டு. ஒன்று அது விதவை. அதன் கணவனை பறவை மாமிசம் உண்ணும் யாரோ சிலர் சென்ற ஆண்டு இறுதியில் கொன்று விட்டனர். சமீபத்தில் அவரையும் தான் தங்கள் உண்டி வில்லுக்கு இரையாக்கினர்.
இப்போது அந்தக் கூண்டு மட்டும் நிற்கிறது ஊமை சாட்சியாய் எங்கள் விருந்தினர் வாழ்ந்ததற்கு.
கொடுப்பினை எங்களுக்குந்தான் இல்லை விருந்திரை இனி தினமும் கண்டு களித்திட. :((
01-02-2013 நடராஜன் கல்பட்டு