வாழும் கோள் அறிக்கை (WWF-Living Planet Report 2010)
உலக வனவுயிர் நிதியம் (WWF) தனது வாழும் கோள் அறிக்கையின் (Living Planet Report) 8வது பதிப்பை இந்த வருடம் கொண்டுவந்துள்ளது. இந்த அறிக்கை மாறிவரும் பல்லுயிரியத்தின் (Biodiversity) நிலைமை, சூழல் அமைப்புகள், இயற்கை வளங்களின் மீதான மனித இனத்தின் நுகர்ச்சி இவற்றை விரிவாக பதிவுசெய்வதுடன் எதிர்கால மனித இனத்தின் ஆரோக்கியம், வளம் மற்றும் நலம் இவற்றின் மேலான இந்த மாற்றங்களின் விளைவுகளையும் ஆராய்கிறது.
இப்படி பல்லுயிரியத்தின் நிலைமை, அதன் மேல் ஏற்படும் பாதிப்புகள் அதை எதிர்நோக்க எடுக்கப்பட்ட பலவகைப்பட்ட நடவடிக்கைகள் இவைகளை கண்காணிக்க பல வகை குறிப்பான்கள் அல்லது அளவீடுகள் பயன்படுத்தப்படுகிண்றன. உலகப் பல்லுயிரியத்தின் நிலைமையை கண்காணிக்க நீண்டகாலமாக பயன்பட்டு வரும் அளவீடான வாழும் கோள் வகையீடு (Living Planet Index-LPI) 1970 இலிருந்து 2007 வரையிலான கால இடைவெளியில் தொடர்ச்சியான 30% வீழ்ச்சியைக் காட்டுகிறது. அதாவது பல்லுயிர்களின் இருப்பு மேற்சொன்ன இந்த காலப்பகுதியில் 30% குறைந்து போய் உள்ளது. அதே போல உயிர்க்கோளின் மீதான மனிதனின் வேண்டல் (demand) 1961க்கும் 2007க்குமான காலப்பகுதியில் 2 மடங்குக்கும் மேலாக அதிகரித்திருக்கிறது. அதாவது மனிதனின் நுகர்வு கலாச்சாரம், உற்பத்திபெருக்கம், முன்னேற்றம், இவைகளுக்காக மனிதன் இயற்கை ஆதாரங்களை 1961க்கும் 2007க்கும் ஆனா காலப்பகுதியில் இருமடங்குக்கும் அதிகமாக பயன்படுத்தியுள்ளான். இது இயற்கைச் சமநிலையை கடுமையாகக் குலைக்கக்கூடியது.
இன்னொரு குறிப்பான் அல்லது அளவீடு சூழலியல் தடக்குறி (Ecological Footprint). இது உயிரியல் படைப்பாற்றல் கொண்ட நிலப்பகுதியின் அளவு, மக்கள் பயன்படுத்தும் இயற்கை வளங்களை மீளாக்கம் செய்வதற்குத் தேவையான நீராதாரம் மேலும் கரியமில வாயுவை உறிஞ்சிக்கொள்வதற்குத் தேவையான கட்டமைப்பு, தாவரவகைகள் இவைகளைக் கண்காணிப்பதாகும். 2007 ஆம் ஆண்டுக்கான சூழலியல் தடக்குறி புவியின் உயிர்த்திறத்தை (biocapacity of Earth) விட 50% அதிகரித்துள்ளது. புவியின் உயிர்த்திறம் என்பது மீளாக்க வளங்களை (renewable resources) உற்பத்தி செய்வதற்கும், கரியமில வாயுவை உறிஞ்சிக்கொள்ளவும் தேவைப்படும் நிலப்பகுதியே ஆகும். எனவே நகர்மயமாக்கல், மக்கட்த் தொகை அதிகரிப்பு இவைகளால் நிலப்பயன்பாடு அதிகரித்து, இயற்கைச் சூழல் மனிதனால் மாற்றப்படுவதால் 2007 ஆம் ஆண்டில் இந்த சூழலியல் தடக்குறி புவியின் உயிர்த்திறனை விட 50% அதிகரித்துள்ளது. அதாவது நாம் இயற்கையிலிருந்து எடுக்கும் வேகம் இயற்கை அதன் சமன் செய்யும் வேகத்தை விட 50 சதவீதம் அதிகமாக இருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக மனித இனத்தின் இந்த சூழலியல் தடக்குறி 1966இல் இருந்து இப்போது இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. இந்த சுழலியல் தடக்குறியின் உயர்வுக்கு முக்கிய காரணம் கார்பன் தடக்குறிதான் (Carbon Footprint). இந்த கார்பன் தடக்குறி 1961 இல் இருந்து 11 மடங்கும் உயர்ந்துள்ளதே சூழலியல் தடக்குறி உயர்வுக்கான முக்கியகாரணம். அதிலும் இந்த உயர்வில் 3ல் 1 பங்கு இதற்கு முந்தைய வாழும் கோள் அறிக்கை வெளியான 1998ஆம் ஆண்டில் இருந்து 2010க்குள், 12 ஆண்டுகளில் நிகழ்ந்துள்ளது. ஆனால் இந்த சூழலியல் தடக்குறி எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி இருப்பதில்லை. நாடுகளுக்கிடையே மிகப்பெரிய வேறுபாடுகளைக் கொண்டுள்ளது. நாடுகளின் பொருளாதார நிலை, வளர்ச்சி நிலைகள் இவைகளைப் பொறுத்து இந்த வேறுபாடு அமைகிறது. முதன் முறையாக வாழும் கோள் அறிக்கையின் இந்தப் பதிப்பில் தான் எவ்வாறு இந்த சூழலியல் தடக்குறியானது வெவ்வெறு அரசியற் பகுதிகளில் காலந்தோறும் மாறி வந்துள்ளது என்பதை மொத்தமாகவும், மற்ற தடக்குறிகளின் பங்களிப்புகளைக் குறிப்பிட்டும் ஆய்வு செய்கிறது. நீர் தடக்குறி (Water Footprint of Production) மீளாக்க வளங்களின் மீதான மனிதனின் வேண்டலைப் பற்றிய இரண்டாவது குறியீடாக உள்ளது. தற்போது 71 நாடுகள் நீர் ஆதரங்களின் மீது குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. அவர்கள் பயன்படுத்துகிற அளவுக்கு அதை திரும்பத் தருவதில்லை. இது சூழலியல் நலம், உணவுத் தயாரிப்பு மனித நல்வாழ்வு இவற்றின் மேல் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
சூழலியல் தடக்குறியும் நீர் தடக்குறியும் சூழியல் அமைப்புகளின் ஆரோக்கியம், மற்றும் மனிதனின் வேண்டல் இவைகளை கண்காணிக்கும் வேளையில் அந்த சூழியல் சேவைகளின் (ecosystem services) நிலமையைப் பற்றி எந்தத் தகவலையும் தருவதில்லை. முதன்முறையாக வாழும் கோள் அறிக்கையின் இப்பதிப்பில் புவிசார் கார்பன் சேமகம் (terrestrial carbon storage) மற்றும் நன்னீர் வழங்கல் (freshwater provision) என்ற உலக அளவிலான சூழியல் சேவைகளுக்கான இரண்டு குறிப்பான்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த குறிப்பான்கள் இன்னும் மேம்படுத்தப்படவும், செம்மைப்படுத்தப்படவும் வேண்டும் என்றாலும் இவைகள் இயற்கையை பாதுகாப்பது மனிதனின் சொந்த நலனுக்கானது என்பதை தெளிவாகச் சொல்கின்றன.
முந்தைய அறிக்கைகளில் உள்ளது போல இம்முறையும் முன்னேற்றத்துக்கும் சூழலியல் தடக்குறிக்குமான உறவு ஆராயப்பட்டு பேணுதலுக்கான குறைந்தபட்ச நிபந்தனைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. இந்த வரையறை புவியின் உயிர்த்திறம் மற்றும் மனித முன்னேற்ற குறியீட்டு எண்ணின் (Human Development Index) அடிப்படையில் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வது பல நாடுகளுக்கு சாத்தியமானதே என்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
முதன்முறையாக இந்த அறிக்கையில் பல்லுயிரியத்தின் மாற்றங்கள் நாட்டின் வருமானத்தின் அடிப்படையில் ஆராயப்பட்டுள்ளன. இந்த ஆய்வு குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் அபாயகரமான அளவில் பல்லுயிரிய இழப்பு நிகழ்வதை கோடிட்டுக் காட்டுகிறது. இந்நாடுகளில் வாழும் மக்களின் மேல் இது பலத்த தாக்கங்களை ஏற்படுத்தும். எல்லா மக்களும் சூழியல் சேவைகளையே தம் நல்வாழ்வுக்காக நம்பி இருந்தாலும், சூழியல் சீர்கேடுகள் நேரடியாக உணரப்படுவது உலகின் ஏழ்மையான எளிய மக்கட்சமூகத்தால் தான். தூய்மையான நீரும், போதிய உணவும், எரிபொருளும், தளபாடங்களும் இல்லாத போது எளிய மக்களால் வறுமையின் பிடியில் இருந்து விடுபட்டு வளமடைய முடியாது.
தொடர்ச்சியான சூழியல் சேவை வழங்கலை உறுதிப்படுத்துவதற்கும், அதன்மூலம் எதிர்கால மனித ஆரோக்கியம், நல்வாழ்வு, வளம் இவற்றை உறுதிப்படுத்தவும் சூழலியல் கைமீறலை முடிவுக்குக் கொண்டுவருவது அவசியமானதாகிறது. உலகளாவிய தடக்குறி கூட்டமைப்பு (Global Footprint Network (GFN)) உருவாக்கிய புதிய தடக்குறி நிலமை கணிப்பானைப் பயன்படுத்தி வளங்களை நுகர்தல், நில பயன்பாடு, தயாரிப்பு போன்ற பல காரணிகளின் அடிப்படையில் இந்த அறிக்கை சில எதிர்கால நிலமைகளை முன்வைக்கிறது. மக்கட் தொகை பெருக்கம், நுகர்வு மற்றும் கால நிலை மாற்றம் இவைகள் குறித்த ஐக்கியநாடுகளின் தாரளமான கணிப்பின் படியே கூட தனது கரியமில வாயு எச்சங்களை உறிஞ்சிக்கொள்ளவும், இயற்கை வள நுகர்வுக்கும் மனித இனத்துக்கு 2030இல் இரண்டு பூமிப்பந்துகள் தேவைப்படும். மாற்று உணவுப் பொருள் நுகர்வு, ஆற்றல் கலவைகள் இவைகள் அடிப்படையில் அமைந்த மாற்று நிலைமைகள் இந்த சூழலியல் தடக்குறிக்கும் புவித்திறனுக்கும் இடையிலான இடைவெளியை சமன் செய்வதாய் இருக்கின்றன. ஆனால் இவைகள் உடனே நடைமுறைப்படுத்தப்படவேண்டும்.
இந்த அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள விபரங்கள் ஒரு தொடக்கம் மட்டுமே. வரபோகிற தலைமுறைகளுக்கான எதிர்காலத்தை உறுதிசெய்ய அரசாங்கங்களும், தொழிலமைப்புகளும் தனிநபர்களும் இந்த உண்மைகளை உடனே செயலாக்கவேண்டும். மேலும் பேணப்பட்ட வளர்ச்சிக்கான (sustainable development) பாதையில் வரக்கூடிய எதிர்கால வாய்ப்புகளையும் தடைகளையும் எதிர்நோக்குவதும் அவசியம். மனித நலனிலும், நல்வாழ்க்கையிலும் இயற்கையின் மையமான பாத்திரத்தை உணர்ந்துகொள்வதன் மூலமே நாமெல்லோரும் சார்ந்திருக்கும் சூழியல் அமைப்புகளையும், உயிர்களையும் பாதுகாக்கமுடியும்.
வாழும் கோள் அறிக்கை (2010) பதிவிறக்கம் செய்ய:
வாழும்கோள் அறிக்கை 2010
Comments