குயிலைப் பற்றி பொதுவாக அறிந்ததெல்லாம் அது அருமையாகப் பாடும் என்பதும், தனக்கென கூடொன்றைக் கட்டிக்கொள்ளாமல் காக்கையின் கூட்டில் தனது முட்டைகளை பொரிப்பதற்காக இட்டுச் செல்லும் என்பதுதான். இந்தக் குயிலில் பல வகைகள் இருக்கின்றன என்று சமீபத்தில் தான் அறிந்துகொண்டேன். சுடலைக்குயில், செவ்விறகுக்கொண்டைக் குயில், அக்கா குயில், குயில், செங்குயில், சக்களத்திக்குயில், கரிச்சான் குயில், கோகிலம் இவையனைத்துமே குயில்களின் வகைகள் என்று அறியப்படுகின்றன. உருவ அளவு தோற்றம் இவைகளில் ஒன்றோடு ஒன்று குறிப்பிடத்தக்க வகையில் வேறுபடும் இவை ஒரு விசயத்தில் மற்றும் ஒரே பண்பைக் கொண்டிருக்கின்றன. அதுதான் இந்த ஒட்டுண்ணி குஞ்சு வளர்ப்பு (brood parasites).
ஒவ்வொரு குயிலினமும் தமது முட்டையின் உருவத்தையும், வடிவத்தையும் மிகவும் கவனமாக வளர்க்கும் பறவையின் (host bird) முட்டையினுடையதைப்போல இருக்குமாறு இடுவதை மிகவும் திறமையாக பயின்றுவருகின்றன. அதே போல இப்படி ஒட்டுண்ணியாக வரும் முட்டைகளைக் கண்டு கொள்வதற்கான திறன்களையும் இந்த வளர்க்கும் பறவைகள் வளர்த்துக்கொண்டே தான் வருகின்றன. இப்படி ஒட்டுண்ணி குஞ்சு வளர்ப்பில் குயில்கள் மட்டுமல்லாது வேறு சில பறவையினங்களும் ஈடுபடுகின்றன. அமெரிக்க கறுப்புத்தலை வாத்து, பழுப்புத்தலை cowbird ஆப்பிரிக்க தேன்காட்டி (hobneyguide) மற்றும் வைடா (whydah) போன்றவைகளைக் குறிப்பிடலாம். இவ்வாறு ஒட்டுண்ணி குஞ்சு வளர்ப்பிலும் ஒரு வேறுபாடு உண்டு. ஆப்பிரிக்க வைடாக்கள் வளர்க்கும் பறவையின் முட்டைகளோடு தமது முட்ட்டைகளையும் இடுகின்றன. தோற்றத்தில் ஒன்றே போல் இருக்கிற இவைகளையும் தமது முட்டைகளென எண்ணி பொறித்து வளர்க்கின்றன வளர்க்கும் பறவைகள். குயிலினங்கள் சற்று கொடூரமானவை. தாம் முட்டையிடும் கூட்டில் உள்ள வளர்க்கும் பறவையின் முட்டையை தனது முட்டையின் எண்ணிக்கைக்கு எற்றவாறு அப்புறப்படுத்தி விடுகிற கொடுமையைச் செய்யும். இதைவிட கொடூரமானது கென்யாவின் தேன்காட்டியின் முறை. இந்தத் தேன்காட்டி குஞ்சுகள் முட்டையில் இருந்து வெளிவரும் போதே வளைந்த கூர்மையான அலகுகளுடன் பிறகின்றன. இதனால் அதை வளர்க்கும் பறவையான செந்தொண்டை-ஈப்பிடிப்பானின் குஞ்சுகளை கொன்றுவிடுகின்றன. சில நாட்களில் தனது தேவை முடிந்துவிட்ட பிறகு இந்த கூர் அலகுகளும் உதிர்ந்துவிடுகின்றன. தனது குஞ்சுகளைக் கொன்ற தேன்காட்டிக் குஞ்சுகளுக்கு இந்த ஈப்பிடிப்பான்கள் உணவூட்டி வளர்க்கின்றன.
|
ஓடை |
இப்படி தங்களை ஏமாற்றும் பறவையின் முட்டைகளை கண்டுபிடிக்க வளர்க்கும் பறவைகளும் முயன்றே வருகின்றன. ஆனால் அதைத் திறமையாக ஏமாற்றியே வருகின்றன இந்த ஒட்டுண்ணிப் பறவைகள் என்பதை இப்பறவைகளின் இருப்பே உறுதி செய்கிறது இல்லையா?
|
சுடலைக் குயில் |
|
சிலம்பன் |
சிலநாட்களாக பெய்த மழையினால் அந்த சிறிய ஓடையில் கொஞ்சம் நீரோட்டம் இருந்தது. நாணல் பூத்து எங்கும் வெண்மை விசிறிக்கிடந்தது. காலை ஒளியில் அது பட்டென பளபளக்கிறது. ஓடையின் உள்ளே நடந்து செல்ல ஒற்றையடிப்பாதை ஒன்றுள்ளது. தங்கி இருக்கும் குருட்டுக்கொக்குகளும் வாத்துகளும் ஒலியெழுப்பிப் பறக்கின்றன. அங்கு முன்பு பறந்து திரிந்த தூக்கணங்களைக் காணவில்லை. ஒரு கருவேல மரத்தில் இந்தக்குயில் தனது இணையோடு இருந்தது. ஒன்று பறந்துவிட இது கொஞ்சம் தாமதித்தது. இதைத் சுடலைக்குயில் (Pied-Crested Cuckoo, Clamator jacobinus) என்பர். 35 செ.மீ அளவுள்ள இது தலைக் கொண்டையோடு கூடிய கருப்பு உடலும் வெள்ளை மார்பும், வெள்ளையான வால் இறக்கை முனைகளையும் கொண்டது. தமிழகமெங்கும் பொட்டல் வெளிகள், முட்காடுகளில் இணையாகக் காணலாம். தென்மேற்கு பருவமழை தொடங்கும் முன் இதன் எண்ணிக்கை வலசை வரும் கூட்டத்தினால் அதிகமாவதாகவும் பருவமழை தொடங்கும் முன் மேற்கு ஆப்பிரிக்காவில் இருந்து இதன் இனம் வலசை வருவதாக ஒரு கருத்து நிலவுவதாகவும் தமிழ்நாட்டுப் பறவைகள் நூலில் ரத்னம் குறிப்பிடுகிறார். வண்டு, நத்தை, எறும்பு, கரையான் ஆகியவற்றைத் தேடித் தின்னுகிறது. சிலம்பன்கள் கூட்டில் அது இனப்பெருக்கம் செய்யும் காலத்தில் இதுவும் முட்டையிடுமாம். சிலம்பன்கள் மிகவும் உற்சாகமான பறவைகள். சதா ஒலியெழுபியவாறு தாவியும் பறந்தும் கூட்டம் கூட்டமாக செடிக்குச்செடி மரத்துக்கு மரம் பூச்சிகளைத் தேடிப் பறந்து திரியும் பறவைகள். அழகான கண்கள் கொண்டவை. அந்தக் கண்களில் ஏமாற்ற உணர்ச்சி எதுவும் தெரிகிறதா என்று இனிமேல் தான் கவனிக்க வேண்டும்.
Comments