சுட்டியானை 7ஆவது இதழ் - மீசைக்கார ஆலா
#சுட்டியானை (7வது இதழ், மார்ச் 2021) வந்துவிட்டது.
ஆலாவைப் பற்றிய எனது ஒரு பக்க உரையாடல் வழியான சிறு அறிமுகம் இது. உங்கள் அல்லது நீங்கள் அறிந்த குழந்தைக்கு தினம் 1 ரூபாய் செலவழித்து (சேமித்து) சுட்டியானை இதழுக்கு #சந்தாதாரர் ஆக்கலாம். #இயல்வாகை வெளியீடுதிங்கள் பறவை – மீசைக்கார ஆலா
அண்ணன் மாறன் ஒரு பறவை ஆர்வலன். அவன் அருமைத் தங்கை தமிழினி. ரெண்டு பேரும் பறவைகளைப் பத்தி அப்பப்ப பேசிக்குவாங்க. அதை உங்ககிட்ட சொல்றோம்!
தமிழினி வேகமாக ஓடி வந்து, ”அண்ணா, இன்று அப்பா என்னிடம் “இப்படி ஆலா பறக்காதே!” என்று சொன்னார். அதன் பொருள் என்ன அண்ணா?
மாறன்: அப்படியா சொன்னார்! (சிரிக்கிறான்) எதற்காகச் சொன்னார்?
தமிழினி: ஐஸ்கிரீம் வேண்டுமென்று காலையில் இருந்து பல முறை கேட்டுக்கொண்டே இருந்தேன் அண்ணா! அதற்காகத்தான் சொன்னார்!
மாறன்: அப்படியா! ஆலா என்றொரு பறவை இருக்கிறது தமிழ்.
தமிழினி: பறவையா?
மாறன்: ஆமாம் தமிழ், இது ஒரு கரையோரப் பறவை. அது நீர்நிலை மேல் ஒரு நொடியும் ஓயாது இங்கும் அங்கும் பறந்துகொண்டே இருக்கும்!
தமிழினி: எதற்காக அண்ணா?
மாறன்: ஆலாக்களுக்கு மீன்கள் தான் உணவு. பறந்தவாறே நீரில் இருக்கும் மீனைத் தேடி, குறிபார்த்து பாய்ந்து பிடித்து உண்ணும்.
தமிழினி: மீன்கொத்தியும் மீனைத்தானே உண்ணும் அண்ணா?
மாறன்: ஆமாம் தமிழ். ஆனால் மீன்கொத்தியை போல அல்லாது ஆலா ஓயாது குளத்தின் மேல் இங்கும் அங்கும் பறந்தவாறே மீனைத்தேடும்! அதனால் ஆலாவைப்போல ஒரு வேலையை முடிக்க ஒருவர் இங்கும் அங்கும் அலைந்து திரிந்தால் ‘ஆலாப் பறக்கிறான்’ என்று அதைக் குறிப்பிடுவது வழக்கம்!
தமிழினி: ஓ! நான் ஐஸ்கிரீம் தின்பதற்காக குளிர்சாதனப் பெட்டியையே சுற்றிவந்துகொண்டிருந்ததால் அப்பா அப்படிச் சொன்னாரா!
மாறன்: ஆமாம். உனக்கு ஆலாவைக் காட்டுகிறேன் தமிழ்! (கணினியில் ஆலாவின் படத்தைக் காட்டுகிறான்)
தமிழினி: ஆலா சிறிய பறவையா அண்ணா?
மாறன்: படத்தில் உள்ள மீசைக்கார ஆலா புறாவைப்போன்ற அளவில் இருக்கும்! ஆலாக்கள் ஒரு கூட்டமாக இங்கும் ஏரியின் மீது பறந்துகொண்டே இருக்கும்!
தமிழினி: எனக்கு ஆலாவைப் பார்க்கவேண்டும் போல இருக்கிறது அண்ணா!
மாறன்: வரும் சனிக்கிழமை காலை நான் பறவை பார்க்கப் போகும் போது உன்னையும் அழைத்துச் செல்கிறேன் தமிழ்.
தமிழினி: நன்றி அண்ணா!
Comments