கூத்தைப்பார் குளத்தில் கூழைக்கடாக் கூட்டம்
ஒவ்வொரு ஆண்டும் கூழைக்கடா (Pelican) ஒன்றிரண்டை நான் கூத்தைப்பார் பெரிய குளத்தில் இந்த மாதங்களில் பார்ப்பதுண்டு. இந்த ஆண்டு, கிட்டத்தட்ட 10க்கும் மேற்பட்ட கூழைக்கடாக்களை அந்தக்குளத்தில் கண்டேன். மகிழ்ச்சியாக இருந்தது. இந்த ஆண்டும் குளத்தை மீன் வளர்ப்புக்காகக் குத்தகை எடுத்திருந்தார்கள். எடுத்தவர், பறவைகளும் கொஞ்சம் சாப்பிட்டுப்போகட்டும் என்று நினைப்பவர் போல. அதனால் போன ஆண்டைப்போல பறவைகளை வெருட்டும் பொம்மைகளை குளத்தில் வைக்கவில்லை. இந்த ஆண்டு குளத்தின் கரையை கொஞ்சம் அகலப்படுத்தி இருந்தார்கள். அதனால் கரையை ஒட்டி இருந்த மரங்கள் பலவும் இல்லை. அவற்றில் பல ஏற்கனவே புயலில் விழுந்துவிட்டன. இந்தக் கூழைக்கடாக்கள் குளத்தின் எளிதில் அணுகமுடியாத மறுபக்கத்தில் இருந்தன. இந்தக்ப் புள்ளிமூக்குக் கூழைக்கடாக்கள் தமிழ்நாட்டில் வசிப்பவைதான். சென்னையில் NIOT Campusக்குப் பக்கத்தில் பார்த்திருக்கிறேன். ஆனால் இவை இந்த மாதங்களில் இங்கு வருவதை வழமையாகக் கொண்டிருக்கின்றன. இதை வலசைபோதல் என்று கூறமுடியாதுதான்!
+
இந்த கூழைக்கடா என்ற பறவையை முதன் முதலில் கிண்டி குழந்தைகள் பூங்காவில் (சென்னை) தான் கூண்டில் பார்த்ததாய் நினைவு. பிறகு கோடியக்கரையில், சென்னையில். இதன் அலகும் அதனோடிணைந்த அந்தப் பையும் அதிசயம் என்று கூறமுடியாது! ஏனெனில் இயற்கையில் அதிசயம் என்பதே சாதரணமாய் ஒவ்வொன்றிலும் காணக்கூடிய ஒன்றுதானே!
கிட்டததட்ட சில மணிநேரங்கள் இந்தப் பறவைகளைப் கவனித்ததில் அவை சங்குவளை நாரைகளைப் போல அல்லது நத்தை கொத்தி நாரைகள், கொக்குகள் போன்று மீன்களைப் பிடிக்கவோ அல்லது தண்ணீரை அளைந்து கொண்டோ இருக்கவில்லை. ஓயாமல் தன் மூக்கை சகல கோணங்களிலும் திருப்பித்திருப்பி தன் சிறகுகளை பிரித்துப்பிரித்து உலர்த்துவது போன்று செய்துகொண்டிருந்தன. சில சமயங்களில் தங்கள் அலகோடிணைந்த பை-வாயை பிதுக்கிக்காட்டுவதும், வான் நோக்கி உயர்த்திப்பிடிப்பதுமாகவே இருந்தன. எப்போது சாப்பிடும் என்று தெரியவில்லை.
ஒரு சமயம் இரண்டு கூழைக்கடாக்களுக்குள் கருத்து மாறுபாடு போல. இரண்டும் கொஞ்சம் முறைத்துக்கொண்டன என்று நினைக்கிறேன். இரண்டும் ஒன்றை ஒன்று நோக்கி அலகை ஒரு முக்கோணம் போல வைத்துக்கொண்டிருந்தன. சிறிது நேரம் கழித்து ஒன்று கொஞ்சம் அடங்கிப்போய் அலகைத் தாழ்த்திக்கொள்ள, மற்றதும் தாழ்த்திக்கொண்டது! ஒன்று வானை நோக்கி மழையை யாசிப்பது போல அலகைத் திறந்துகொண்டு நின்றது. பிறகு அதுவாக மூடிக்கொண்டது!
நாம் பஸ்ஸிலும், ரயிலிலும் அலைவது போல, போனை சதா பார்த்து நமக்கு நாமே சிரித்துக்கொள்வது போல இந்தச் செய்கைகளுக்குப் பிறகு ஏதேனும் பொருள் இருக்கலாம்! ஆனால் நமக்குத்தான் இன்னும் புரிபடவில்லை. இந்த கூழைக்கடாக்கள் இப்படி இறக்கைகளை கோதிக்கொண்டும், பிரித்து மேய்ந்துகொண்டும், தங்கள் அலகுகளை வைத்து அட்டகாசம் பண்ணிக்கொண்டிருந்த அத்தனை நேரமும், பின்னணியில் ஒரு 20 கரண்டிவாயன்கள் ஓவியக் காட்சிபோல கழுத்தை வளைத்து அசையாமல் நின்று கொண்டிருந்தன. இந்த கூழைக்கடாக்களின் அருகே நாம் சம்புக்கோழிகள் மூழ்கி எழுந்து மீனையோ பூச்சிகளையோ பிடித்துக்கொண்டிருந்தன. ஒரு 20 அல்லது 30 மீசை ஆலாக்கள் ஓயாது ஆலாய்ப் பறந்துகொண்டிருந்தன. சின்னச்சின்ன மீன்களை பிடித்துக்கொண்டு அவை மேலேறுவது ஒரு காட்சி! இந்த கூழைக்கடாக்களுக்குச் சற்று தள்ளி நெடுங்கால் உள்ளான்கள் 60, 70 என்ற எண்ணிக்கையில் ஓய்வு எடுப்பதும் கூட்டாய் எழுந்து சுழன்று பறந்து பின் அடங்கி நீரில் நிற்பதுமாய் இருந்தன. ஒரு இளம் ஆலா நீரில் நிறுத்தப்பட்டிருந்த கழியை தன் ஆஸ்த்தான இருக்கையாக வரித்துக்கோண்டது போல. அந்தப்பக்கம் வரும் எல்லாம் ஆலாக்களையும் வீரீட்டு, கடிந்துகொண்டு துரத்திவிட்டவாறிருந்தது. அது ஒன்றுதான் ஆலாக்கள் இவ்வளவு நேரம் உட்க்காரும் என்பதை அறிந்துகொள்ள உதவுவது போல உட்கார்ந்திருந்தது.
Comments