டிக்கல் மலர்க்கொத்தி
நேற்று (ஆக. 18) புனித வளனார் கல்லூரி வளாகத்தில் சில மணிநேரங்கள் இருக்க நேர்ந்தது. அங்கு இந்த டிக்கல் மலர்க்கொத்தியைக் கண்டேன். அது ஒரு கூடு கட்டியிருந்தது. இலைச்சறுகுகள், நார்கள், பஞ்சு இவற்றைக்கொண்டு ஒரு தொங்கும் கூடு. முதல்பார்வைக்கு அப்படி ஒரு கூடு இருப்பது எளிதில் தெரியாதவாறிருந்தது. அக்கூட்டில் இரண்டு குஞ்சுகள் இருந்தன. தாய்க்குருவி சில நிமிடங்களுக்கு ஒருமுறை வந்து உண்வூட்டிச் சென்றது. குஞ்சுகள் தாயின் அண்மையில் தலையை வெளியே நீட்டி வாயைப்பிளந்து கீச்சிட்டுக்கொண்டிருந்தன. தாய் சகல முன்னேச்செரிக்கையுடன் கூட்டை அணுகி குஞ்சுகளுக்கு உணவூட்டிக்கொண்டிருந்தது.
இந்த டிக்கல் மலர்க்கொத்தியின் அலகு வெளிறிய இளஞ்சிகப்பு நிறமுடையதாகையால் ஆங்கிலத்தில் வெளிறிய அலகுடைய மலர்க்கொத்தி என்றழைக்கப்படுகிறது. தடித்த அலகுடைய மலர்க்கொத்தியில் இருந்து இவ்வலகின் காரணமாக வேறுபடுத்திக் காட்டப்படுகிறது. இம்மலர்க்கொத்திகள் பொதுவாக மிகச்சிறியன. சுமார் 8 செமி நீளமிருக்கலாம். கட்டையான வாலையும் சிறிய உடலையும் கொண்டவை. இலைப்பரப்பினுள் மிக எளிதாக பறந்தும் தாவியும் நிலைகொள்ளாது செல்வதால் படமெடுக்க சற்றே கடினமானவை. இவை சிறிய பழங்கள், சிலந்திப்பூச்சிகள், மலர்த்தேன் இவற்றை உணவாக்கொள்கின்றன. இந்தக்குஞ்சுகளுக்கு இவைகளை கொண்டுவந்து அவற்றின் விரிந்து பிளந்த செம்மஞ்சள் நிற முதிரா அலகுக்குள் நன்கு நுழைத்து ஊட்டி விடுவது காட்சியின்பம் பயப்பது. அக்குஞ்சுகள் தமக்குள் போட்டி போட்டுக்கொண்டு ஒவ்வொரு வாயுணவுக்கும் முன்னே வருவதும், தாய் அவற்றுக்கு மாற்றி மாற்றி உணவிடுவதும் தொடர்ந்து நடக்கும் நாடகம். குஞ்சுகளின் கண்களும், வாயும் நன்கு வளர்ந்திருப்பனவாகத் தெரிந்தது.
இந்த மலர்க்கொத்திகள்: ஜூன் முதல் செப்டம்பர் மாதங்களில் தென்னிந்தியாவில் கூடுகட்டி குஞ்சுபொறித்து 2 முதல் 4 குஞ்சுகளை வளர்க்கின்றன. வட இந்தியாவில் சற்றே முன்னேயே இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன.
இப்பறவையை நான் இதற்கு முன் பல இடங்களில் கண்டுள்ளேன். படமெடுத்துள்ளேன். என் வீட்டில் கொய்யாக்கனியை சுவைக்க வருகிற ஒன்றை இங்கு பதிவுசெய்துள்ளேன். நேற்று நான் கண்டதில் எனக்குப் புதியது ஒன்று இருந்தது. பொதுவாக பற்றியுட்காரும் (passerine) பறவையினத்தில் பல பறவைகள் தங்கள் குஞ்சுகளாக இருக்கும் போது தங்களது கழிவை ஒரு நெகிழக்கூடிய உறுதியான பையோடு வெளியேற்றுகின்றன. இதை மலப்பை (fecal sac) என்று அழைக்கலாம். இப்பையை உடனுக்குடன் தாய்ப்பறவை அகற்றுவதன் மூலம் கூடனாது தூய்மையாகப் பேணப்படுகிறது. நமது குழந்தைகளின் டயப்பரோடு தொடர்புறுத்தத் தோன்றுகிறது. ஆனால் டயப்பரைப் போல இது சூழலைச் சீரழிப்பதில்லை; மட்கக்கூடியதும், சில சமயங்களின் தாய்ப்பறவையால் உண்ணப்படக்கூடியதுமான வகையில் உள்ளது.
மலப்பையானது குஞ்சின் பின்துளையின் வழியாக வெளியே வரும்போது |
மலப்பையை பிடித்துக்கொண்ட தாய்க்குருவி |
நேற்று இப்பறவையானது தன் கூட்டில் இருந்து சில நிமிட இடவெளியில் இரண்டு மலப்பைகளை வெளியேற்றியது. ஒன்று அதன் குஞ்சின் பின்புறமுள்ள துளையின் (Cloaca) துளையின் வழியே வெளியேவரும் போதே அலகால் பிடித்திழுத்து வெளியே கொண்டுபோனது. பறவைகள் இந்த ஒரே துளையின் மூலமே கழிவையும், சிறுநீரையும், முட்டைகளையும் வெளியேற்றுகின்றன. சிறிது நேரத்தில் மற்றொன்றை கூண்டுக்குள் நன்கு தலையை விட்டு எடுத்துக்கொண்டு போனது. இவை இரண்டும் இரண்டு குஞ்சுகளின் மலப்பைகளாக இருக்கலாம். ஏனெனில் அவை சற்றொப்ப ஒரே நேரத்தில் வர சாத்தியமிருக்கிறதல்லவா! இந்த மலப்பைகளை தாய் தொலைவுக்கு கொண்டு செல்லுகிறது. தங்கள் குஞ்சை தேடி வருகிற பிற பறவைகள்/ பாம்புகளிடமிருந்து பாதுகாக்கவும் இப்படிச் செய்யலாம் அல்லது பெரும்பாலான தாய்ப்பறவைகள் அதை உணவாகவும் உட்கொள்கின்றனவாம். இதை அறிந்த போது ‘புள்ளைக்காகப் பீயைத்தின்னு’ என்ற சொலவடை நினைவுக்கு வந்தது. அதன் நடைமுறை பொருள் சற்றே மாறி இருந்தாலும், இப்பறவைகளின் இச்செயலைக் கண்ணுற்ற தமிழர்கள் இப்படியான சொலவடையை உருவாக்கியிருக்கலாம்.
Comments