மொழியின் கால்களில் இழுபடும் நிலக்காட்சிகள்
அன்றைக்கு கல்லணை பாலத்தில் இருந்து நீர்க்காகங்களை கொள்ளிடத்தில் பார்த்துக்கொண்டிருந்தேன். நீர்க்காகங்கள் கரையில் நின்றிருக்க ஒற்றைக் கொக்கு ஓடும் நீரில் நின்றிருந்தது. பார்க்கும் போது அப்போது டாவோயிசத்தின் யின்-யாங் என்ற சொற்றொடர் தோன்றி மறைந்தது. வீட்டில் அப்படத்தைப் (படம் 1) பார்க்கையில் ‘குளித்துக் கரையேராத கோபியர்கள் என்ற தேவதேவனின் கவிதைத் தலைப்பு நினைவுக்கு வந்ததை எப்படிப் பொருத்துவது? இப்படிப் பலமுறை மனதில் மொழியின் பாய்ச்சல் நிகழ நிலக்காட்சிகளும், பறவைகளின் படங்களும் ஏதுவாய் இருந்திருக்கின்றன. இரயிலில் போகும் பொழுதெல்லாம் ‘கொக்கு பூத்த வயல்கள்’ என்ற சொல்லாட்சி தோன்றாமல் கொக்குகள் நிற்கின்ற வயல்களைக் கடந்ததில்லை. அதுவும் தேவதேவன்தான்! மனம் சொற்களால் இருக்கிறது. ஆனால் சொல், வேலி கட்டுகிற ஒன்றில் வந்து நிரம்புகிற ஒன்றை நிலக்காட்சிகள் வெளியே பிரதிபலிக்கும் போது மனம் புதிய பதச்சேர்க்கைகள், தாவல்கள், பாய்ச்சல்களை மொழியின் துணைகொண்டு நிகழ்த்திப்பார்க்கிறது. ஆனால் மனம் ஒரு போதும் நிரம்புகிற ஒன்றாய் இருக்கமுடிவதில்லை; அது விளிம்பு கட்டுகிற, வரையறுக்கிற ஒன்றாய்த்தான் இருக்கமுடியும்; அதில் வந்து நிரம்புகிற ஒன்று நிச்சயம் மனமில்லை. மனம் ‘கரையேராத கோபியர்கள்’ என்கிற சொற்ச்சேர்க்கையை உடைத்து அர்த்தப்படுத்தமுடியும். ஒற்றையாய் நீரில் இருக்கிற கொக்கு கண்ணனாகவும், கரையில் நிற்கிற நீர்க்காகங்கள் கோபியர்களாகவும் கொண்டால் நிறம், நிற்கிற இடம் எல்லாம் அப்படியே தலைகீழான ஒரு காட்சிப்பிம்பம் இந்தப்படம். ஆனால் இந்தப் பொருளுரையெல்லாம் உண்மையில் ஒன்றுமில்லை; நிலக்காட்சியோ, பறவையோ தருகிற மொழியின் பாய்ச்சல் எப்போதோ முடிந்துவிட்டது. அது ஒரு மின்னல். அது அப்போதே ஒளிர்ந்துவிட்டது. பிறகு அம்மின்னலில் கண்ட காட்சிகளை மனம் கட்டமைக்கிறது.
படம் 1 |
இன்னொரு சொற்ச்சேர்க்கை ‘எதனுடைய நடமாடும் நிழல்கள் நாம்’. மெளனியுடைய சேர்க்கை இது. இதுவும் ஏதோ ஒன்றை நிரப்பிவிட்ட மாதிரிச் செல்கிறது. இதற்கான விளக்கமெதுவும்வேண்டாம்.
சங்க இலக்கியம் தினைகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது. உண்மையில் மனதின் நிலக்காட்சிதான் புறத்தில் பிரதிபலிக்கிறது என்று கவிஞனுக்கு தெரிந்திருக்கிறதென்றால் அவன் கவிதை மரபு எப்படிப்பட்டதாக இருக்கும்! மனதின் நிலக்காட்சி என்றா சொன்னேன்? தவறு. இல்லை. மனம் சொற்களைக் கொண்டு விளிம்பல்லவா சமைக்கிறது! உண்மையில் அது அகத்தின் காட்சி. சங்க இலக்கியம் உண்மையில் சரியாகத்தான் ‘அகம்’ ‘புறம்’ என்று பிரிக்கிறது. அகமென்பது உண்மையில் மனமல்ல என்றுதானே சொல்லிக்கொண்டிருந்தேன்!. ஏ.கே.இராமானுஜன் ‘Interior Landscape' என்றுதானே பெயரிட்டார்.
Comments