தாயினும் சாலப் பரிந்து


IMG_3586c-PS-wL

”பால் நினைந்தூட்டும் தாயினும் 
சாலப்பரிந்து நீ பாவியேனுடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி
உலப்பிலா ஆனந்தமாய
தேனினைச் சொரிந்து புறம்புறம் திரிந்த
செல்வமே சிவபெருமானே
யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவதினியே ”

என்கிறார் மாணிக்கவாசகர். கன்றுக்கு பாலை கன்றின் தேவை, அளவு நினைந்து தானே ஊட்டும் பசுவினும் சாலப்பரிந்து அவருக்கு இறைவன் அருளியதாக மாணிக்கவாசகர் குறிப்பிடும் போது தாய் தன் பிள்ளைக்கு  நினைந்து உணவளிப்பதை காணுகிறோம். தாயும் தந்தையும் சேர்ந்து சில உயிர்களில் குழந்தையை வளர்க்கின்றன.  குறிப்பாக பறவைகளில் பல பறவைகள் இப்படி வளர்ப்பதைக் காணலாம். அப்படி இருவரது அக்கறையையும், அன்பையும் பெறும் சூழலில் கூட தாயின் அணுகுமுறை, உணவூட்டும் பாங்கு போன்றவை வேறுபட்டதாக இருக்குமா என்ற ஐயம் எனக்கு நேற்று நீங்கியது. 

கல்லணைச் சாலையை ஒட்டி இருந்த மரச்செறிவுக்குள் ஒரு லோட்டன் தேன் சிட்டுகளின் கூட்டை நேற்று கண்டேன். உண்மையில் நான் ஆண் தேன் சிட்டை அவதானித்துக்கொண்டிருந்த போது, அது அலகில் கவ்விய பூச்சியை உண்ணாமல் அங்கும் இங்கும் பறந்து நான் இருந்த இடத்தைச் சுற்றி வந்தபோது அங்கு ஒரு கூடு இருக்கலாம் என்று கவனித்தேன். உண்மையில் என்னால் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. சற்றே விலகி இருந்து கவனித்தபோது அப்பறவையே அக்கூட்டுக்குச் சென்றபோதுதான் அந்தக்கூடு அங்கிருப்பதையே கண்டுகொள்ள முடிந்தது. அந்த அளவுக்கு ஒரு முட்புதருக்குள்  குப்பைகள் சிலந்திவலை போன்ற ஒன்றில் தொங்கிக்கிடப்பது போல தோற்றம் தரும் வகையில் அமைந்திருந்தது அக்கூடு. 
புதருக்குள் தேன்சிட்டின் கூடு
ஏறக்குறைய ஒரு 15 செமி உயரமும், கூட்டின் மையப்பகுதியில் 5 செமி அகலமும் இருக்கும் வகையில் இருந்தது அக்கூடு. காய்ந்த இலைச்சருகுகள், மரப்பட்டைகள் ஒரு சிலந்தி வலைபோன்ற மெல்லிய பஞ்சு போன்ற பொருளால் கட்டப்பட்டிருந்தன. அது இலம் அல்லது எருக்கம் பஞ்சின் இழைகளாக இருக்கலாம். 
தேன்சிட்டின் கூடு
இழைகளால் கட்டப்பட்ட கூடு

பச்சை இலைகள் அக்கூடு கட்டப்பட்டிருந்த மெல்லிய கிளையின் இலைகள். கூட்டின் மேல்பகுதியில் அதன் வாயில் இருந்தது. அப்பறவைகள் உணவை கொண்டு வந்ததான் மூலம் உள்ளே குஞ்சுகள் இருந்ததை ஊகிக்க முடிந்தது. ஆனால் அதைக் காணமுடியவில்லை.

இந்த இடத்தில்தான் தாய்ப்பறவை உணவூட்டுவதில் இருந்த வேறுபாட்டைக் காணமுடிந்தது. ஆண் பறவை மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் அடிக்கடி வந்து அப்பகுதியை தொடர்ந்து கண்காணித்து வந்தது. பூச்சிகளைப் பிடிக்காமல் அவ்வப்போது வந்து அப்பகுதியை ஆராய்ந்து சென்றது. பூச்சியைப் பிடித்தபின்னும் கூட உடனே கூட்டுக்கு வரமால் அங்குமிங்கும் அமர்ந்து சூழலைக் கண்காணித்தது. நான் சற்று தொலைவில் இருந்தே கூட்டை அவதானித்து வந்தபொழுதும் ஆண் பறவை மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் நடந்துகொண்டது. மாறாக பெண் பறவை உணவை வழக்கமான நேர இடைவெளிகளிலேயே கொண்டு வந்ததோடு மட்டுமின்றி பெரிய எச்சரிக்கை உணர்வற்று வழக்கமான பாதுகாப்பான அணுகுவழிகளையே கையாண்டதைக் கண்டபோது தாய்ப் பறவை உணவை ஊட்டுவதற்கு அதிக அக்கறையும், கருத்தும் கொண்டிருந்ததாக உணர்ந்தேன். தந்தையோ பாதுகாப்புக்கும், எச்சரிக்கைக்கும் அதிக இடமளித்ததாக நினைத்தேன்.

IMG_3617c-PS-wL
தாய்ப்பறவை

IMG_3578c-PS-wL
பூச்சி உணவுடன் தந்தைப் பறவை

IMG_3604c-PS-wL
தந்தைப் பறவை

தந்தையின் இருப்பு பாதுகாப்பு விசயத்தில்  அத்தாய்க்கு உதவியாக இருக்கும் என்றாலும்  ’நினைந்து ஊட்டும் தாய்’ என்பது ஊட்டுவதை மட்டுமே பெரிதும் தாய் நினைக்கும் என்று நேற்று கண்டுகொண்டேன்.





Comments