நீலமென்பது நிறமல்ல

நீல நிறம் என்பது எங்கும் வியாபித்திருக்கிறது.
வானும் கடலும் நீல நிறம் பெறுவது உன் நீலவிழிகளால் என்கிறார் கவிஞர். அறிவியல் அறிஞர் இராமனோ, ஏழு நிறங்களைக்கொண்ட சூரிய ஒளியின் நீல நிறம் மிக அதிகமாக காற்றில் உள்ள பல வாயுக்களின் மூலக்கூறுகளால் சிதறடிக்கப்படுவதால் அவ்வாறு எங்கும் நீல நிறம் தென்படுகிறது என்கிறார். நீலம் ஒரு இசைத் துணுக்கு எனில் அது தனது தோழர்களான,இண்டிகோ ஊதா (purple) மற்றும் பச்சையோடு முயங்கி பல புதிய புதிய ஆழ்ந்த வர்ணச்சேர்க்கைகளை ஒளித்தெறிப்புகளாகச் செய்யக்கூடியது.


பறவைகளில் நீல நிறம் பல வகைகளில் காணப்படுகிறது. பச்சையும் நீலமும் கலந்த மயில் கழுத்து நீலம் ஒரு புகழ்பெற்ற நீலம் அல்லவா? அதன் வர்ணச்சேர்க்கையில் மயங்காதவர் எவர் உளர்!


மயில் கழுத்து நீலம் மயக்கும் நீலமென்றால், அதற்கு சற்றும் குறையாத நீலக் கழுத்தழகி தேன்சிட்டு. அதன் கழுத்தின் நீலம் கரு நீலக்கட்டி. மயிலின் கழுத்தில் நீலம் பச்சையாய் மருகி விரியுமென்றால், தேன் சிட்டின் கழுத்தில் ஒரு மரகதப்பச்சை நீலமாய்ப்பரவி  பின் கருப்பாய் விரியும். 



இவையிரண்டு மட்டுமல்ல இன்னும் பல பறவைகள் நீலத்தை விதவிதமான வர்ணச்சேர்க்கையில் அணிகின்றன. நீல தாழைக்கோழி என்றழைக்கப்படும் (Grey-headed Swamphen) நீர்க்கோழியின் கழுத்தை அப்படிக் குறைவாக எடைபோட்டுவிடமுடியாது. அது பச்சையை விடுத்து நீலத்தையும் ஊதா நிறத்தையும் (purple) ஒரு அபூர்வ சேர்க்கைக்கு ஆட்படுத்தி அதைத் தன் கழுத்தில் அணிகிறது. அது ஒய்யாரமாக நடக்கும் போதும், திரும்பும் போதும், அந்த அபூர்வ நீலம் அலையடித்துச் செல்கிறது. 



வர்ணச் சேர்க்கைகள் கொண்ட மயில் ஒரு சிம்பனி என்றால் பெரிய அலகு மீன்கொத்தியின் நீல நிறம் மிக நேரடியானது. வர்ணக்கலப்பும், ஜொலிப்பும் இன்றி மிகச்சிறிய வார்த்தைகளில் இசைக்கப்படும் இசைப்பாடலைப் போன்றது. எளிமையான ஒரு தெம்மாங்கு போல. அது சொல்லவருவதை மயக்கமெதுவுமின்றி ஒரு சொல்லில் சொல்லுகிறது. அதே நேரம் கருப்பு நிற அலகு கொண்ட சிரால் மீன்கொத்தியை தெம்மாங்கில் இணக்கமாகக் கலந்த இசைத்துணுக்குகளைக் கொண்ட ஒரு மெல்லிசைப்பாடல் என்று கூறலாமா?

இதைப்போலவே எளிமையான, நேரடியான ஆனால் ஒரு ஜென் கவிதை போல ஒரு ஆழமான சொற்சேர்க்கையைக் கொண்ட கருநீல அறிவிப்பொன்று இருக்கமுடியுமானால் அது அரசவால் ஈப்பிடிப்பான் என்றாகும். கருமை நிறம் மெல்ல இளகி நீலத்தைத் தொடும் பொழுது அதன் தலையாகிறது.

இந்த எல்லா நீலங்களின் வகைக்களையும் மயக்கமெதும் இன்றி அடுக்கிக்கட்டி நிரலாக்கிவைத்துக்கொண்டது பனங்காடை. அதன் தலையிலும், சிறகிலும் நன்கு வரையறுக்கப்பட்ட நீலத்தொகுதிகள் அடுக்கப்பட்டுள்ளன. அது ஒரு தெளிவான மொழியில் எழுதப்பட்ட கட்டுரை எனலாகும்.

இதெல்லாம் இப்படி இருக்க சில நாட்களுக்கு முன்பொரு நீலவால் பஞ்சுருட்டான் ஒன்றைப்பார்த்தேன். அதன் வால் ஒரு மிக அழகிய கனவு. நீலக்கனவு. விவரித்துச் சொல்ல ஒன்னாத கனவு.

இந்தக்கனவோடு நீலம் தொடர்கிறது.


Comments

Popular Posts