புள்ளிச் சில்லையும் சிறுபிள்ளை விவசாயமும்

என் வீட்டுத்தோட்டத்தில் ஒரு முருங்கை மரம் இருந்தது. எனவே தேன்சிட்டுகள் இரண்டு எப்போதும் என் சன்னலருகில் இருக்கும். தவிர கரிச்சான், கருஞ்சிட்டு இணையொன்று, தையல்காரக் குருவி, மைனாக்கள், சிலம்பன்கள் என்றழைக்கப்படும் தவிட்டுக்குருவிகள், சின்னான்கள் (சிவப்பு வால் சின்னான் மற்றும் வெண்புருவச்சின்னான்)  என்று பல குருவிகள் அங்கு வருவதுண்டு. கோடைகாலத்தில் அங்கு ஒரு மண் சட்டியில் கொஞ்சம் நீர் வைக்கத்தொடங்கினேன். எல்லா பறவைகளுக்கும் குளிக்கவும், குடிக்கவும் அது மிகவும் தோதாக இருந்தது போல. அதுவும் இந்த சின்னான்கள் வந்து தண்ணீர் குடித்துவிட்டு தங்கள் சிவந்த பின்புறங்கள் நனையுமாறு குளித்துச்செல்லத் தொடங்கின. இதற்கப்புறம் புது வரவாக ஒரு குயிலிணையும் கூட நீர் அருந்த வந்தன. ஒரு நாள் ஒரு மஞ்சள் குருவி கூட வந்தது. ஆனால் சிட்டுக்குருவிகளை நான் ஒரு நாளும் பார்க்கவில்லை.

பிறகு கேழ்வரகையும் அரிசியையும் கலந்து ஒரு பறவை உணவாக ஒரு தானியக்கலன் ஒன்றைச் செய்து அதில் வைத்தேன். அதை எந்தக்குருவியும் சீண்டவில்லை. அந்த உணவு சீரழிந்ததுதான் மிச்சம்.  என் பையன் வீட்டில் வாங்கி வைத்திருந்த கம்பை எடுத்து ஓரிடத்தில் தூவியிந்திருப்பான் போல. அது முளைத்து வளர்ந்து கதிர் பிடித்தது. கம்பு  விளைந்த போது முதன் முறையாக தினைக்குருவி என்றழைக்கப்படும் இந்த புள்ளிச் சில்லைகள் (Spotted Munia) சில வந்து அதை தின்று கொண்டிருந்தன. அதன் சின்ன மூக்குகள் தானியத்தை உண்பதற்கேற்றவாறு இருந்ததை அன்றுதான் நன்கு கவனித்தேன். குருவிகளுக்கு தானியக் கலன்களை வைப்பதைவிட இந்த இயற்கை முறை பலனளிக்கிறதோ! இந்தக்குருவிகள் தினந்தோறும் வந்து இதை உண்டு செல்கின்றன. இதை என் பையனுக்குக் காட்டி அவன் செய்த சிறு விவசாயம் புள்ளினங்களுக்கு உதவுவதைச் சொன்னபோது அவனுக்கு மிகவும் மகிழ்ச்சி.
தேன் உண்ணும் பறவைகளுக்கும் (தேன் சிட்டு), புழு, பூச்சிகளை உண்ணும்  பறவைகளுக்கும் (சிலம்பன்கள்) தானியங்களை உண்ணும் பறவைகளுக்கும் அலகுகளின் அமைப்பில் இருக்கும் வேறுபாட்டை காண்பித்தேன்.




































































File:BirdBeaksA.svg

http://en.wikipedia.org/wiki/Beak

Comments