பேரவையின் காலங்காட்டி (FETNA Calender)


Indian Robin-Male  கருஞ்சிட்டு. © Thangamani 2010


 இவ்வாண்டு (2011) ஜூலை முதல் அடுத்த ஜூலை வரையிலான பேரவையின் காலங்காட்டி (FETNA Calender) இவ்வாண்டு வெளியிடப்பட்டது . தமிழ்நிலப்பறவைகள் என்ற கருத்தை மையமாகக் கொண்ட காலங்காட்டிக்கு என்னுடய படங்கள் பயன்பட்டன. நண்பர்கள் வடிவமைப்பை மேற்கொண்டனர்.  இதற்கு ஒத்துழைப்பும், உதவியும் நல்கிய நண்பர்களுக்கு என் அன்பும் நன்றியும். சுந்தருக்கு என் அன்பு.

அதற்கு என்னால் எழுதப்பட்ட முன்னுரை கீழே:


"அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்கு வரும் எந்த நாட்டவருக்கும் ஒரு பண்பாட்டு அதிர்ச்சி ஏற்படுவது உண்டு. பண்பாட்டு அதிர்ச்சி என்று இங்கு குறிப்பிடப்படுவது சமூக பழக்கங்கள், உணவு உடை சார்ந்த வேறுபாடுகளால் விழைவதை அல்ல. இவற்றுக்கெல்லாம் வேராக இருக்கக் கூடிய மனிதனுக்கும் இயற்கைக்குமான உறவில், அடையாளப் படுத்திக் கொள்ளலில் உள்ள வித்தியாசத்தால் விளைவதையே. கீழை நாடுகளின் பண்பாடு என்பது நீண்ட தொடர்ச்சி கொண்டது. அது இன்றும் பழங்குடிகளின் கூறுகள் பலவற்றை தன்னுடன் கொண்டது. தனது பழங்குடிக் கூறுகளை அறியாமையானது என்றோ அறிவுக்கு எதிரானது என்றோ அது தீர்மானமாகக் கொள்வதில்லை. இன்னும் சொல்லப் போனால் கீழைப் பண்பாட்டை பல பழங்குடிக் கூறுகளை, நம்பிக்கைகளை, அறிதல்களை அழிக்காவண்னம் உன்னதப்படுத்தப்பட்ட ஒரு தொகுப்பு எனக் கூறலாம்.

கீழைப் பண்பாடுகள் இயற்கையை முழுமுதலாகக் கடவுளின் வடிவாகக் கொண்டால் அதில் மனிதன் ஒரு சிறப்பான இடத்தைப் பெறுவது உண்மைதான். ஆனால் அவ்விடம் அவனது தன்னை அறியும் தகைமை கருதியே அவனுக்கு அளிக்கப்படுகிறதே அல்லாமல் எவ்வகையிலும் மற்ற உயிரினங்களைவிட மேலானதாகவோ உரிமை கோருவதாகவோ அமைக்கப்பட்டிருக்கவில்லை. இந்த பிரபஞ்சத் தொகுதியில் அவனும் ஒரு துளி. தன்னை அறியும் திறன் கொண்டதால் மேலும் பொறுப்பதிகமுள்ள ஒரு உயிர். மாறாக மேலை பண்பாடுகள் மனிதனை இந்த பிரபஞ்சத்தின் மையப் புள்ளியாக நிறுத்துகின்றன. இந்த பிரபஞ்சமும் அதன் உயிர்த் தொகுதிகளும் அவனது வாழ்வின் வளங்கருதியும் அவனது மகிழ்வு கருதியும் அவனுக்காகப் படைக்கப்பட்டனவாகக் காட்டுகின்றன. இந்தப் பண்பாட்டு வேறுபாடு மிக ஆழமானதாகவும், இன்றைய மனித வாழ்வியல் நோக்கத்தின் அடிப்படையைத் தீர்மானிப்பதாகவும் இருக்கிறது. கலை, பொருளாதாரம், அறிவியல், மனித வாழ்வின் வெற்றி இப்படி மிகப்பெரிய மனிதச் செயல்பாடுகளின் திசையையும் போக்கையும் தீர்மானிப்பவையாக இந்தப் பண்பாட்டுக் கூறுகளே உள்ளன. மனிதனை ஒரு படைப்பாளனாக உருவாக்கும் கல்விமுறையை வழக்கொழித்து வெறும் உற்பத்தியில் இயந்திரங்களுக்கு நிகரான ஒரு பங்காளியாகவும், தீவிர நுகர்வோனாகவும் மட்டும் சமைக்கும் கல்வி முறை உருவாக்கத்திலும் மேலைப் பண்பாட்டுக் கூறுகள் பெரும் பங்கு வகிக்கின்றன.

கிழக்கில் குறிப்பாக தமிழ்ப் பண்பாட்டில் இயற்கையின் மாபெரும் கட்டமைப்பில் மனிதன் என்பவன் ஒரு குறிப்பிடத்தக்க, பொறுப்பான இடத்தைப் பெற்றவன். இயற்கையின் சமநிலையைக் குலைக்காவண்ணம் வாழ உரிமையளிக்கப்பட்டவன். தமிழ்ப் பண்பாடு பிரபஞ்சத்தைக் கூர்ந்து கவனித்து அதன் எல்லையற்ற பேராற்றலில் தன்னையும் ஒரு துளியாக உணர்ந்து ஒரு சமநிலையை அடைவதையே விடுதலை என்று அழைக்கிறது. மனித அகவுணர்வுகளை வெளிப்படுத்தவும், காட்சிப்படுத்தவும் புற உலகின் அத்தனை சாத்தியங்களையும் தமிழ்ப்பண்பாடு பயன்படுத்திக் கொண்டிருப்பதை நமது இலக்கியங்களைப் படிக்கும்போது உணரலாம். இந்த வகையில் இந்த நாட்காட்டியை சில தமிழ்நிலப் பறவைகளும் சங்கத் தமிழும் அழகு செய்கின்றன".

Comments