ஒரு கதிர்க்குருவிக்கு எதை குடிக்கக்கொடுப்பீர்கள்.. கொஞ்சம் கலாட்டா பண்ணு மச்சி!!

குழுமாயி அம்மன் கோவில் அருகில் உள்ள உய்யங்கொண்டான் வாய்க்காலுக்கு சென்ற ஞாயிறு சென்றேன். வழக்கம் போல அதில் சாக்கடை  நீரைத் தவிர வேறெதுவும் கலக்கவில்லை. 30 வருடங்களுக்கு முன் நீர்நிலைகளில் சிறுநீர் கழித்த சிறுவர்களைக் கடுமையாகத்திட்டிய சில சமயம் அடிக்கக்கூட போன மக்கள் இருந்த ஊர் இது. அந்த மனநிலை அப்போதையது மட்டுமல்ல. ஒரு நில உடமைச் சமூக மனநிலமை. நீர் தனது வாழ்வாதரங்களில் ஒன்று என்பதைக்கண்டுகொண்ட ஆதி மனதின் மனநிலை. அதில் வியப்பொன்றுமில்லை; அதில் பண்பாடு ஒன்றுமில்லை; ஆனால், அந்த நீர் தூயதாக இருக்கவோ  அல்லது மாசடைந்து போகவோ முடியுமெனில் அது மனிதனாலேயே ஆகக்கூடியது என்று உணர்ந்து அதைப் போற்றிப்பேணுவதைப் பற்றிய அக்கறையை தனது விழுமியங்களில் தேக்கியதால்தான் இந்தப்பண்பாடு போற்றத்தக்கதாக ஆகிறது. மற்ற எந்த உயிரினமும் நீரை மாசுபடுத்த முடியாது. கோடிக்கணக்கான ஆண்டுகளாய் இங்கு மற்ற உயிரினங்களால் நீர்ச் சுழற்சி தடைப்படுத்தப்படவில்லை; எனவே மாசடையவில்லை.

நிலன்நெளி மருங்கின் நீர்நிலைப் பெருக
தட்டோரம்ம இவன் தட்டாரே
தள்ளாதோர் இவன் தள்ளாதோரே
                                                            -புறநானூறு

பொருள்:  பள்ளமான இடங்களைக் கண்டறிந்து, அங்கு நீரை சேமித்து வைத்தலே ஓரு அரசனின் முதல் கடமை. இதனை புறந்தள்ளியவன் அரசன் என்னும் தகுதிக்கு பொருத்தமற்றவனாகி விடுவான்! 

நீரைப்பேணுவதைப்பற்றி குறைந்தது நூறு பழமொழிகளையும், வழக்காறுகளையும் தமிழில் இருந்து சொல்லமுடியும். ‘தாயைப்பிழைத்தாலும், தண்ணீரைப்பிழைக்காதே’ என்று எந்தக்கல்வியும் கல்லாத பாமரனாகக் கருதப்படுபவனும் சொல்ல நானே என் இளமையில் கேட்டிருக்கிறேன். இன்று எத்தனை பேர் இந்தச் சாதரணபழமொழியைச் சொல்லக்கேட்டிருக்கிறோம்?

சரியாகச் சொன்னால் ஒரு தலைமுறையில் நாம் வந்து சேர்ந்திருக்கும் தூரம்  ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல்.  உண்மையில் அதிபயங்கர வளர்ச்சி. சூரியனைப் புகழ்ந்து எழுதப்பட்ட செவ்விலக்கியப்பாடல்கள் பல செம்மொழிகளில் இருக்கும்; சந்திரனையும் கூட அப்படி போற்றுகிற நாகரீகங்கள் இருக்கும். மழையைப் போற்றி எழுதப்பட்ட செவ்விலக்கியப் பாடல்களை வேறு எங்கேனும் கேட்டிருக்கிறீர்களா?

***
நான் கதிர்க்குருவிகளை இதற்கு முன் படமெடுத்ததில்லை; இன்று உய்யங்கொண்டான் வாய்க்காலுக்குப் பக்கத்தில் உள்ள நிலமொன்றில் படமெடுத்தேன். அந்நிலத்தில் பெரிய விவசாயமெதும் இல்லை. கைவிடப்பட்ட சில வாழைமரங்கள் அழிந்துகொண்டிருந்தன. பக்கத்தில் இருந்த சிறிய வாழைத்தோப்பில் சூரிய சக்தியில் இயங்கும் நீரீறைக்கும் பம்பு நிறுவப்பட்டிருக்கவேண்டும். சூரியப்பலகைகளைக் காணமுடிந்தது. இந்த வயலில் சமீபத்தில் பெய்த மழையினால் கொஞ்சம் நன்னீர் அங்கிருந்த சிறிய பள்ளங்களில், அது பழைய மடையும் வாய்க்காலுமாக இருக்க வேண்டும், இருந்தது. அதனருகில் ஒரு புதரும் புல்லும் காணப்பட்டன. அதில் 6 முதல் 8 வரையிலான கதிர்க்குருவிகள் காணப்பட்டன. கதிர்க்குருவிகள் பூச்சியினங்களை உண்ணும், பற்றிக்கொண்டு உட்காரும் (passerine)  பறவை இனங்களில் ஒன்று. ஏறக்குறைய  உங்கள் நடுவிரலை விட சற்றே நீளமான உடம்பைக் கொண்டது. இங்கும் அங்கும் நமது மனதைப்போல தாவக்கூடியது. சற்றே சிவப்பான கண்களைக் கொண்டது. கைக்குள் அடக்கிவிடலாம் போன்ற தோற்றம் கொண்டது.

கீழே இருக்கும் இந்தக்கதிர்க்குருவி ஒரு சாதரண கதிர்க்குருவி (Plain Prinia) இது இனப்பெருக்கக்காலத்தில் இருக்கும் ஒரு காதலியாக இருக்கலாம். ஏனெனில் இதன் அலகு சற்றே வெளிறிப்போய் இருக்கிறது. இந்த சாதரண கதிர்க்குருவியின் வாலில் அதன் நுனியில் எந்த குறிப்பிடத்தக்க அடையாளமும் இல்லை. இதன் முதுகு சற்றே மணல் நிறமாக இருக்கிறது. கழுத்தும், அடிப்பாகமும் கொஞ்சம் வெண்மையாக இருக்கின்றன. வால் விரைப்பாக சற்றே தூக்கினாற்போல இருப்பதுவும் வழக்கம் தான்.


இந்தக் கதிர்க்குருவியின் அலகு சற்று கருப்பாய் இருக்கிறது; இது இனப்பெருக்க பொலிவில் இல்லை போலும். நாம் பொருளாகக் கருதாத காய்ந்த, மெலிந்த ஒரு புல் தட்டையில் இருந்து இந்த பிரபஞ்சத்தைக்காணுகிறது.


இந்தக்குருவியின் தலைப்பகுதி சற்றே சிலேட்டு கருப்பாக இருக்கிறது பாருங்கள்; இது சாம்பற் கதிர்க்குருவி. இதுவும் ஒரே அளவினதே. இதன் கழுத்தும் வயிற்றுப்பகுதியும் கூட வெள்ளையாகத்தான் இருக்கிறது. ஆனால் இதன் வாலைப் பார்த்தீர்களா? வால் நுனியில் கருப்பு வெள்ளைத் தீற்றல்கள் இருக்கின்றன.


***
இந்த கதிர்க்குருவிகள் அந்த கைவிடப்பட்ட வயலில் உள்ள சிறு வாய்க்காலிலும், மடையிலும் மழைநீர் இல்லாவிட்டால்   உய்யங்கொண்டானில் நாம் கலக்கும் சாக்கடை நீரைத்தான் குடிக்கவேண்டும்.

கொஞ்சம் கலாட்டா பண்ணூ மச்சி!

Comments

heritage said…
நன்று!

Popular Posts