எது எளிது? எது உலகுக்கு இனிது? - கொசு உள்ளான்



நினைச்சுப்பார்க்கும் போதெல்லாம் மனசு   வியப்பால் திகைச்சுப் போற எத்தனையோ விசயங்கள் ஒவ்வொருத்தருக்கும் இருக்கும். எனக்கு அப்படி ஒன்னு இந்த கொசு உள்ளான் (Little Stint) என்கிற இந்தப்பறவை. ஒரு 1/2 அடி ஸ்கேலை விட சின்னதுதான். கரையோரப்பறவை. அலைகள மிதிக்க ஓடி விளையாடுகிற குழந்தைகள்போல குறுக்கும் நெடுக்கும் ஒவ்வொரு அலைக்கும் பின்னும் ஓடி அதில் ஒதுங்கும் பூச்சிகள், சின்ன கடல் உயிரிகள் போன்றவற்றைத் தேடித்தேடி உண்ணும். கால்களும் அலகும் நனைந்து மின்னும் அழகுக்கறுப்பு நிறம். இந்த இனப்பெருக்கமல்லாத காலத்தில் அதன் உடலில் வெண்மையும், சாம்பலும் தூக்கலாக இருக்கும். பப்பாளி விதை போன்ற ஈரத்தில் மினுக்கும் கண்கள். எடை ஒரு 20 கிராம் இருக்கும். நம் இதயத்தின் எடையில் 5ல் ஒரு பங்குதான் இதன் எடை. அதனால் தான் அத்தனை வேகமாக ஓடுகிறோ என்று எண்ணத்தோன்றும். இப்படி இங்க வந்து கோடியக்கரையிலையும், பழவேற்காட்டுலையும் அலைகளுக்குப் பின்னாடி ஓடிகிட்டு இருக்கேன்னு பார்க்கும் போதுதான் தெரியும் இது ரொம்பதூரம் வடக்க இருந்து வந்ததுன்னு.
சிவப்பு- இனப்பெருக்கம் செய்யும் இடங்கள்; இளம்பச்சை- கடந்து வந்த பாதை; நீலம்-இனப்பெருக்கமல்லாத காலங்களில் காணப்படும் இடங்கள் | படம்:Xeno-canto
 வடக்கன்னா ஜம்மு-கஷ்மீரில்ல அதுக்கும் வடக்க, சீனா, மங்கோலியா, ரஷ்யாவுக்கும் வடக்க. இங்க வரைபடத்துல சிவப்பு நிறத்துல வடகோடியில வடதுருவத்துக்கு முன்னால கடைசி நிலங்கள் இருக்கு பாருங்க, அங்க.  சின்ன வயசுல சோவியத் புதினங்களில் ஆவியும், மனமும் அலைந்து திரிந்த பனிப்பாலைகள். விவசாயிகளும், கொல்லர்களும் வசிக்கிற சின்ன கிராமங்களத் தாண்டி, பல ஆயிரம் மைல்களுக்கு மனிதர்கள் கூட இல்லாத உயர்ந்த புற்கள் ஆங்காங்கே எழுந்த கரையோரங்கள், காரா கடல், லெப்டிவ் கடல் அலைகளுக்கு பின்னாடியும் இவை தன் குஞ்சுகளோடு இப்படித்தான் ஓடிக்கொண்டிருந்திருக்கும். அப்போது அவை அதே சின்னக் கண்களும் கறுத்த கால்களும் அலகும் கொண்ட கொசு உள்ளான் தான். என்னோட தனிமையான ஆன்மாவைப்போல சோவியத்தின் கனவுகள் அலையடிக்கிற, ஆளே இல்லாத, தனிமையின் பாடல் ஒரு குழலாகவோ, ஒற்றைப் பாடலாகவோ காற்றால் எடுத்துச்செல்லப்படுகிற பெருவெளிகளில் அது தன் குஞ்சுகளை முட்டையிட்டு அடைகாத்து வளர்த்தெடுத்தெடுத்திருக்கிறது. அதன் சின்னக் கால்கள் எனக்குத் தரும் கிளர்ச்சியை உங்களுக்குச் சொல்ல முடியாதது எனக்கு வருத்தமே. அந்தக்கால்கள் என் ஆன்மா மட்டுமே சென்றலைந்த அந்த பனிக்காடுகள், அலைகடலோரங்களில் திரிந்தவை, அவற்றில் இன்னும் அந்த மண்ணின் துகள்கள் ஒன்றேனும் இருக்கலாம். அந்த கள்ளமில்லா இளம் பெண்களும், சண்டையிடும் குடும்பத்தலைவிகளும் மீசைவைத்த குடிகார ஆண்களும், சலித்த மூதாட்டிகளும், அனுபம் கனிந்த முதியவர்களும் இருக்கிற கிராமங்களைத் தாண்டி அவர்கள் காலடிகள் கூட அரிதினும் அரிதாகப் பதிந்திருக்கூடிய மணற்பரப்புகளில் அலைந்து திரிந்தவை அந்தப் பாதங்கள். அந்தப்பப்பாளி விதைக் கண்கள் வடதுருவத்தின் மேலெழுந்து வந்த இளம் பொன்னிற ஒளியில் நனைந்து குளிர்ந்தவை. அது தெற்கே இன்னும் இன்னும் என்று பறந்து வந்து இந்தக் கரையோரங்களில் என் முன்னே ஓடிக்கொண்டிருப்பது எதற்காக? தனது சின்னஞ்சிறிதான வயிற்றை நிரப்பிக்கொள்ளவா? ரஷ்யாவின் உள்நாட்டுப்பகுதிகளையும், மங்கோலியாவையும் சீனத்தையும் முற்றாகத் தவிர்த்து கஜகஸ்தானின் வழியாக ஆப்கானிஸ்த்தான், பாகிஸ்த்தான் வழியாக ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான மைல்கள் பறந்து இந்தியாவுக்குள் வந்து இங்கே தென்கோடியில் அலைகளுக்குப் பின்னே ஓடிக்கொண்டிருக்கத் தெரிந்தவைகளுக்கு முயன்றால் விவசாயமும், நகரங்களும், வானூர்திகளும் வசப்பட்டிருக்காதா? எது எளிது? எது உலகுக்கு இனிது? எனக்கு மூச்சடைக்கிறது!



படங்கள் 2018 திசம்பரில் பழவேற்காட்டில் எடுக்கப்பட்டவை.

Comments

Auxi said…
ஒவ்வொரு உயிருக்கு பின்னாலும் ஒரு கதை. அந்த கதையில் கதை கூறுபவரின் கதைகளும் ஒளிந்திருகின்றன. மின்னும் பப்பாளி விதைகள்...கண்கள். கொசு உள்ளானை அறிமுகபடுத்தியதற்கு நன்றி, தங்கமணி
நன்றி ஆக்ஸி!

Popular Posts