கொசு உள்ளான்

கொசு உள்ளான், Calidris minuta
கொசு உள்ளான் ஒரு கரைப்பறவை. சிறிய கூரான கருமை நிற அலகை கொண்ட இவை, கரையோரமாக தங்களின் இரையை தேடுகின்றன. 13-15 செமீ தான் இதன் அளவு. சட் சட்டென தாவிப்பறந்து பறந்து விட் விட் விட் என்று குரல் கொடுத்துகொண்டு சிறு புழு பூச்சிகளையும்,  சதுப்பு நில தாவரங்களையும் தேடித் தின்னும்.இதன் கருப்புக் கால்கள் இன்னொரு அடையாளம். அதுதான் இதனை பச்சைக்கால் கொசு உள்ளானிடமிருந்து பிரித்தறிய உதவுகிறது. பெரும் எண்ணிக்கையில் வலசைவரும் இப்பறவை கடற்கரை சார்ந்த உப்பங்கழிகள், மண் திட்டுக்கள், ஆற்றுக் கழிமுகங்கள் சார்ந்து இரை தேடும்.




இந்தப்பறவையை நான் கோடியக்கரையில் சென்ற ஆண்டு நவம்பரில் படமெடுத்தேன். பழைய சோவியத் யூனியனில் (கஸக்ஸ்த்தான்)  அல்மா-அடா பகுதியில் 9.8.1977 வளையமிடப்பட்ட ஒரு கொசு உள்ளான் கோடியக்கரையில் 13 வருடங்கள் 16 நாட்களுக்குப் பிறகு 25.8.1990இல் பிடிக்கப்பட்டது என்று சலீம் அலி குறிப்பிடுகிறார். சரியாக 6000 கிமீ கடந்து வந்திருக்கிறது. கசக்ஸ்தானிலிருந்து துர்க்மெனிஸ்த்தான், ஆப்கானிஸ்த்தான், பாகிஸ்த்தான் வழியாக வரச்சொல்கிறது கூகுள். நடுவில் சுங்கச்சாவடிகள் இருப்பதை மறக்காமல் தெரிவிக்கிறது. இந்த உள்ளானும் ஒரு வேளை கஸக்கஸ்த்தானில் இருந்து வந்திருக்கலாம்; அல்லது இன்னும் வடக்கே ஆர்டிக் பகுதியில் இருந்து வந்திருக்கலாம். 

தாவியும் லாகவமாகப் பறந்து திரும்பியும் கரையோர பூச்சிகளை கூட்டம் கூட்டமாக மேய்கின்றன இந்த உள்ளான்கள். ஆயிரக்கணக்கில் விண்னேறி காற்றில் கடுகி விரையும்போதும், சட்டென வளைந்து திரும்பி எதிர்திசையில் ஏறிச்செல்லும் போதும் அவைகள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்வதோ, ஒன்று வழித்தப்பி சிதறி வெளியேறுவதோ கிடையாது. எவ்வளவு நேர்த்தியான ஒத்திசைவு? 

Comments

Popular Posts