சிறகை உணரும் பொழுதில்

சில படங்கள் காணுந்தோறும் நம்மை மனநிறைவும், மகிழ்வும் கொள்ளச் செய்யும். அப்படியான என்னுடைய படங்களில் ஒன்றுதான் இந்த சிரால் மீன்கொத்தியின் (Common Kingfisher) படமும். இது காண்பதற்கரிய பறவை ஒன்றுமில்லை. தமிழ்நாடெங்கிலும் நீர்நிலைகளை ஒட்டி இதைக்காணலாம். பளீரென்ற நீல நிற முதுகும், துருநிற மார்பும், செக்கச்சிவந்த கால்களும் கருத்த அலகும், கண்டத்திலும் காது மடலென வெண் தீற்றல்களும் கொண்ட வண்ணப்பறவை.  இரண்டு வருடங்களுக்கு முன் (2016) கிளியூர் குளத்துக்கு வந்திருக்கும் வலசைப் பறவைகளைப் பார்க்கப்போன ஒரு மழைக்காலத்தில் தான் ஒரு குளத்தருகில் இது இப்படி ஒரு அழகான அமரத்தில் அமர்ந்திருக்கக் கண்டேன். அது மீனைக் கண்காணித்துக்கொண்டிருக்கையில் நான் அதை படமெடுத்துக்கொண்டிருந்தேன். 

***

பறவை என்பது விடுதலையின் குறியீடாக அறியப்படுவது. ’விட்டு விலகி நிற்பாயிந்தச் சிட்டுக்குருவியைப் போலே’ என்றான் மகாகவி. அதன் சிறகுகள் மனிதனின் புறத்தே மறைந்துபோன ஆனால் அகத்தில் எப்போதும் படபடத்து விரியும் விடுதலையை குறிப்பதாகவே அறியப்படுகின்றன. மனிதன் அவனது மரண பரியந்தம்  தளைப்படுத்தப்பட்டிருக்கும் ஒரே விலங்கு. எங்கள் தெருவில் ஒரு வீட்டில் ஒரு நாயொன்று வாசலில் நிற்கும் புங்க மரத்தில் சங்கிலியால் கட்டப்பட்டிருக்கும். அதனருகிலேயே அதன் உணவுப் பாத்திரமும் கிடக்கும். நாய் கிடந்து கிடந்து சற்றே மணலாகவும் குழியாகவும் ஆகிப்போன இடத்தில் இருந்து அதை வேறெங்கும் எப்போதும் நான் பார்த்ததில்லை. குளித்தலையோ, விளையாட்டையோ, சிறு நடையினையோ அந்நாய் அவ்வீட்டுக்கு வந்தபின் அறிந்திருக்குமா என்பதே ஐயமே! எனக்கு எப்போதும் தோன்றுவது மனிதர்கள் அதிலிருந்து பெரிதாய் வேறுபட்டிருக்கவில்லை என்பதுதான். கண்ணுக்குத் தெரியாத சங்கிலி என்று சொல்வதுகூட உண்மையில்லை. நன்றாய் எல்லோருக்கும் கண்ணுக்குத் தெரிகிறது. முயன்றால் அதை தொட்டு உணரக்கூட முடியும். ”தானே தளைப்பட்டு -- மிகச் சஞ்சலப்படும் மனிதா” என்கிறது மகாகவியின் இன்னொரு குருவிப்பாட்டில் ஒரு குருவி. ஆனால் அந்தத் தளை மனிதனின் விழிப்புணர்வினால் கட்டவிழக்கூடியதுதான் என்கிறார்கள். சிலர் அப்படியான ஒரு தளைப்படுதலே ஒரு மாயைஎன்பதுமுண்டு. அப்படித்தான் இந்தப்பறவையின் கட்டும் என்று கண்டுகொண்டபோது மகிழ்ந்தேன்..


IMG_1203c-PS


சிறகை 
உணரும்
பொழுதில்
தன்னைப் 
பிணைக்கும்
கட்டுகளேதும் 
இல்லையெனக்
காண்கிறதிப்
பறவை

Comments

Popular Posts